திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோயிலில் களப பூஜை ஆரம்பம்
திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் சந்தன களப பூஜை நேற்று துவங்கி வரும் 27ம் தேதி வரை நடைபெறுகிறது.;
Update: 2024-01-16 01:40 GMT
108 வைணவ திருப்பதிகளில் ஒன்றான குமரி மாவட்டம். திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் ஆண்டு தோறும் தைமாதம் முதல் நாள் முதல் 12 நாட்கள் சந்தன களப அபிசேஷகம் நடைபெறும். இன்று நிர்மால்ய தரிசனத்துக்குப் பின்னர் கோவில் கருவறையில் இருந்து ஆதிகேசவப்பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய அர்ச்சனா மூர்த்தி சிலைகள் ஒற்றைக்கல் மண்டபத்துக்கு எடுத்து வரப்பட்டது. பின்னர் உதய மார்த்தாண்டமண்டபத்தில் 12 கலசங்கள் வைத்து தந்திரி கலச பூஜை நடத்தினார். மேலும் பிரம்ப கலசம் எனப்படும் பெரிய கலசத்தில் சந்தன களபம் நிறைக்கப்பட்டு பூஜைக்கு பின், 11.45 மணி அளவில் ஆதிகேசவப்பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய அர்ச்சனா மூர்த்தி சிலைகளுக்கு களப அபிஷேகம் நடந்தது. அபிஷேகத்திற்குப்பின்னர் பட்டாடை அணிவிக்கப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்படும். தீபாராதனைக்குப்பின்னர் சுவாமி விக்கிரகங்கள் மீண்டும் கருவறைக்கு எடுத்துச்செல்லப்பட்டது. இவ்வாறு 15.ம் தேதி இன்று முதல் வரும் 26.ம் தேதி வரை 12 நாட்கள் மதியம் களப அபிஷேகம் நடைபெறும். களப பூஜையின் இறுதி நாளான 27.ம் தேதி காலை 10 மணி அளவில் 47 கலசங்கள் வைத்து பூஜை நடைபெறும்.