அதிக பாரம் ஏற்றி சென்ற 5 லாரிகளுக்கு ரூ.2.50 லட்சம் அபராதம்

அளவுக்கு அதிகமாக லோடு ஏற்றிச் சென்ற 5 லாரிகள் மீது வழக்கு பதிவு.

Update: 2024-02-28 09:18 GMT

 அதிக லோடு ஏற்றி சென்ற லாரிகளுக்கு அபராதம்

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் மற்றும் உத்திரமேரூர் ஒன்றிய பகுதிகளை சுற்றிலும் ஏராளமான தனியார் கல் அரவை தொழிற்சாலைகள் மற்றும் கல் குவாரிகள் இயங்குகின்றன. இத்தொழிற்சாலைகளில் இருந்து, ஒரகடம், ஸ்ரீபெரும்புதுார், தாம்பரம், சென்னை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு ஜல்லிக்கற்கள் மற்றும் எம் - சாண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்களை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள், வாலாஜாபாத் வழியாக செல்கின்றன.

கட்டுமான பொருட்களை ஏற்றி செல்லும் லாரிகளில் சில, விதிமுறைகளை மீறி அதிக லோடு மற்றும் தார்ப்பாய் போர்த்தாமல் இயக்கப்படுகின்றன. இதனால், எம்-சாண்ட், மணல் சாலைகளில் பரவுவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் சாலையில் நடந்து செல்போர் பாதிப்படைகின்றனர்.

மேலும், அதிக லோடு காரணமாக சாலைகள் சேதம் அடைகின்றன. இதுகுறித்து, தொடர்ந்து புகார் எழும்பியதையடுத்து, காஞ்சிபுரம் போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம் மற்றும் வாலாஜாபாத் காவல் உதவி ஆய்வாளர் சங்கர் உள்ளிட்ட குழுவினர் வாலாஜாபாத் சாலையில் விதிமுறைகளை மீறும் கனரக வாகனங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

அதிக லோடு ஏற்றி வரும் லாரிகள் மற்றும் தார்ப்பாய் போர்த்தாமல் எம்--சாண்ட் ஏற்றி செல்லும் லாரிகளை மடக்கி அந்த வாகனங்கள் மீது வழக்கு பதிவு மற்றும் அபராதம் விதித்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது அளவுக்கு அதிகமாக லோடு ஏற்றிச் சென்ற 5 லாரிகள் மீது வழக்கு பதிவு செய்து, 2.50 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

Tags:    

Similar News