காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்
காஞ்சிபுரம் மாவட்ட வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் நலக்காக்கும் கூட்டம் ஆட்சியர் அலுவலக வளாக கூட்ட அரங்கில் நடைபெற்றது
காஞ்சிபுரம் மாவட்ட வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் நலக் காக்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் ஆட்சியர் அலுவலக வளாக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில் வேளாண் துறை சார்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த மாதம் இயல்பை விட 37 சதவீதம் அதிக மழைப்பொழிவு பெறப்பட்டதாகவும் , நீர்நிலைகளில் பொதுப்பணித்துறை ஏரிகளில் 205 ஏரிகளும், பஞ்சாயத்து ஏரிகளில் 234 ஏரிகள் 100% நீர் நிலை இருப்பு இருப்பதாக தெரிவித்து இருந்தனர்.
கூட்டுறவுத் துறை சார்பில் அனைத்து கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் விற்பனை நிலையம் போதிய பூச்சி மருந்துகள் மற்றும் உரங்கள் இருப்பதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி ரூ 3.90 லட்சம் மதிப்பிலான விவசாய கடன் மற்றும் வேளாண் இடுபொருட்களை விவசாயிகளுக்கு வழங்கினார். கடந்த கூட்டத்தில் அளிக்கப்பட்ட மனுக்களின் தீர்வு மற்றும் நிலைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கப்பட்டது.
மேலும் கூட்டத்தில் விவசாயிகள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து ஆட்சியரிடம் கோரிக்கைகள் வைத்தனர். குறிப்பாக நீர்நிலைகளை பாதுகாத்தல் வரத்து கால்வாய்களை புனரமைத்தல் கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் மற்றும் வேளாண்துறை , கூட்டுறவு சார்ந்த அலுவலர்கள் விவசாயிகள் என பலர் கலந்து கொண்டனர்.