உரியவரிடம் பணத்தை ஒப்படைத்த மாணவர்களுக்கு குவியும் பாராட்டு
சாலையில் கிடந்த பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த பச்சையப்பன் பள்ளி மாணவர்களின் பாராட்டி பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகம் சான்றிதழ் வழங்கியது.
கல்வி மாவட்டம் என அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் பல்வேறு அரசு பள்ளிகளும் , தனியார் பள்ளிகளும், கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன. இதில் பயில பல்வேறு சுற்றுப்புற கிராமங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் காஞ்சிபுரத்திற்கு வருகை புரிகின்றனர்.
பொதுவாகவே தற்போது பள்ளி கல்லூரி மாணவர்களின் ஒழுங்கீன செயல் கண்டு அனைத்து தரப்பினரும் விமர்சனம் செய்து வரும் நிலையில் காஞ்சிபுரம் பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் இருவர் செய்த செயல் காஞ்சிபுரம் மட்டுமல்லாது அனைத்து தரப்பினரிடம் நன்மதிப்பைப் பெற்றுள்ளது. கீழம்பி பகுதியை சேர்ந்த யுவராஜ் மற்றும் செல்வகுமார் இருவரும் பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளியில் முதலாம் ஆண்டு படித்து வருகின்றனர்.
வழக்கமாக கிராமத்திலிருந்து காஞ்சிபுரம் பேருந்து நிலையம் வந்து அங்கிருந்து நடைபெறும் ஆகவே பள்ளிக்கு வருவது வழக்கம். அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தாலுகா அலுவலக சாலையில் வந்து கொண்டிருந்தபோது சாலையில் மணி பர்ஸ் ஒன்று கிடந்ததைக் கண்டு அதனை மீட்டு மூங்கில் மண்டபத்தில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த துணை ஆய்வாளர் ராஜியிடம் சம்பவம் கூறி ஒப்படைத்தனர். காவல்துறையினர் இவர்களது செயலை பாராட்டி அதிலிருந்த முகவரி கொண்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர். இந்த செயல் ஊடகங்கள் மூலம் வெளிவந்து அனைத்து தரப்பினரையும் மகிழச்செய்தது.
பத்திரிகைகள் மற்றும் செய்தி ஊடகங்கள் வாயிலாக அறக்கட்டளை நிர்வாகம் அறிந்து மகிழ்ச்சியடைந்தது. நேர்மையாகவும், சமூக அக்கறையுடனும், மனிதாபிமானத்துடனும் தாங்கள் இருவரும் நடந்து கொண்ட செயல் மிகவும் பாராட்டுக்குரியது. தங்களைப்போன்ற மாணவர்களால் பெருமை கொள்கிறது பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகம்.தாங்கள் வாழ்வின் எல்லா நிலைகளிலும் நேர்மையையும், அறத்தையும் கடைப்பிடித்து, நன்கு படித்து சமூகத்திற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் வகையில் செயல்பட்டு, வாழ்வில் வெற்றியடைய வாழ்த்தி, தலா ரூ. 2500/- ரொக்கத்தை இன்று அவர்களின் பெற்றோர்களை அழைத்து காலை இறைவணக்க கூட்டத்தில் இது குறித்த தகவல்களை பிற மாணவர்களுக்கும் தெரிவித்து பரிசளித்தனர் பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகிகள்.