குமரி : ஆற்றில் மூழ்கி எக்ஸ்ரே டெக்னீசியன் உயிரிழப்பு
இரணியல் அருகே வள்ளியாற்றில் குளித்த எக்ஸ்ரே டெக்னீசியன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே கண்டன்விளை பகுதியை சேர்ந்தவர் ஜெபகாருண்யம் மகன் அஸ்வின் ஜோஸ் (36) மலேசியாவில் எக்ஸ்ரே டெக்னீசியனாக வேலை பார்த்து வந்தார். இவர் மனைவி 2 பிள்ளைகளுடன் நாகர்கோவில் பகுதியில் வசித்து வந்தார். தற்போது மலேசியாவில் இருந்து ஊருக்கு வந்த அஸ்வின் ஜோஸ் இரணியல் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு நேற்று காலை பெற்றோர் மற்றும் மனைவி குழந்தைகளுடன் வந்தார்.
பின்னர் மாலையில் அந்த பகுதியில் செல்லும் வள்ளியாற்றை பார்க்க குடும்பத்துடன் சென்றனர். அங்குள்ள ஒரு பெரிய பாறையில் அமர்ந்தவர்கள் தண்ணீர் ஓட்டத்தை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர். அஸ்வின் ஜோஸ் ஆற்றில் குளித்தார். உறவினர்கள் கரையில் உள்ள பாறையில் அமர்ந்திருந்தனர். அப்போது திடீரென அஸ்வின் ஜோஸ் ஆழமான பகுதிக்கு சென்றதால், நீந்த முடியாமல் தவித்துள்ளார். இதை பார்த்த உறவினர்கள் சத்தம் போட்டு உள்ளனர். உடனடியாக அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் ஆற்றில் இறங்கி தேடினர். ஆனால் அதற்குள் அஸ்வின் ஜோஸ் தண்ணீரில் மூழ்கி விட்டார்.
இது குறித்து திங்கள் சந்தை மற்றும் குளச்சல் தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் தெரிவித்து தீயணைப்பு நிலைய ஊழியர்கள் வந்து ஆற்றில் இறங்கி அஸ்வினை தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும் போலீசார், இரணியல் பொதுப்பணி துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்து பாலம் அருகில் உள்ள தடுப்பனையிலிருந்து ஷட்டரை திறந்து தண்ணீரை வெளியேற்றினர். இதை அடுத்து ஆற்றில் தண்ணீரின் நீர்மட்டம் குறைய தொடங்கிய நிலையில் இரவு சுமார் 7 மணி அளவில் அஸ்வின் பிணமாக மீட்கப்பட்டார். இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.