ஏரிகளுக்கு நீர்வரத்து குறைவு - கவலையில் ஆழ்ந்த விவசாயிகள்
Update: 2023-11-20 06:11 GMT
காஞ்சிபுரம் மாவட்டம் ஒன்றியத்தில், ஒன்றிய கட்டுப்பாட்டின் கீழ் 130 ஏரிகளும், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 96 ஏரிகள் என, மொத்தம் 226 ஏரிகள் உள்ளன. ஒன்றியத்தில் உள்ள மொத்த விவசாய நிலப்பரப்பில், 60 சதவீதம் நிலங்கள் ஏரி பாசன மூலம் பயிரிடப்படுகின்றன. இந்நிலையில், இந்தாண்டு பருவமழைக்கு இதுவரை உத்திரமேரூர், அனுமந்தண்டலம் மருத்துவன்பாடி ஆகிய ஏரிகள் மட்டுமே முழுமையாக நிரம்பி உள்ளன. கனமழை இல்லாததால், பெரும்பாலான ஏரிகள் நீர்வரத்து இல்லாமல் உள்ளது. ஒன்றிய கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 130 ஏரிகளில், மூன்று ஏரிகள் மட்டும் 75 சதவீதம் நீர் இருப்பும், 44 ஏரிகள் 50 சதவீதம் நீர் இருப்பும், 83 ஏரிகளில் 25 சதவீதத்திற்கு குறைவாகவும் நீர் இருப்பு உள்ளது. இதேபோல, பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 96 ஏரிகளில், மூன்று ஏரிகள் நிரம்பி உள்ளன. 27 ஏரிகளில் 25 சதவீதத்திற்கு குறைவாக நீர் இருப்பு உள்ளது. தொடர்ந்து, 58 ஏரிகள், 50 சதவீதத்திற்கு குறைவாகவும், 8 ஏரிகள் 50 சதவீதத்திற்கு மேல் 75 சதவீதம் வரை நீர்த்தேக்கம் உள்ளதாக நீர்வளத் துறையினர் தெரிவித்துள்ளனர். ஒன்றியத்தில் பெரும்பாலான ஏரிகள் இதுவரை நிரம்பாததால் ஏமாற்றம் அடைந்துள்ள விவசாயிகள், அடுத்த தினங்களில் கனமழை பெய்து ஏரிகள் நிரம்பக் கூடும் என எதிர்பார்த்துள்ளனர்.