காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ஆனி தங்க கருட சேவை!!
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நடைபெற்ற ஆனி தங்க கருட சேவையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரத்தில் உள்ள சிறப்பு பெற்ற வரதராஜப் பெருமாள் கோவிலில் ஆண்டு தோறும் வைகாசித் திருவிழாவில் 3-வது நாளிலும், ஆனி மாதம் மற்றும் ஆடி மாதம் என 3 முறை தங்கக்கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இந்த நிலையில் இந்த ஆண்டு மாத கருட சேவையை யொட்டி உற்சவர் தேவராஜ சுவாமிக்கு சிறப்புத் திருமஞ்சனம், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது. பின்னர் பெருமாள் கண்ணாடி அறையில் இருந்து வாகன மண்டபத்துக்கு வந்து தங்ககருட வாகனத்தில் பச்சைப் பட்டு உடுத்தியும், முத்துக்கிரீடம் மற்றும் தங்க ஆபரணங்கள், மாலைகள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். பின்னர் பெருமாளுக்கு சிறப்பு தீபாராதனை நடை பெற்றது. மஞ்சள் பட்டாடை அணிந்து தங்கக்கருட வாகனத்திற்கு வந்த பெருமாள் முதலா வதாக கோவில் வளாகத்தில் உள்ள ஆழ்வார் சுற்றுப் பிரகாரத்திற்குள் வலம் வந்தார். பின்னர் கோவிலின் நுழைவு வாயிலில் ராஜகோ புரத்தின் முன்பாக கோபுர தரிசனம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து ஆஞ்சநேயர் சந்நிதியில் சிறப்பு தீபாராதனையும் அதனைத் தொடர்ந்து கோவில் மாட வீதியில் உலா வந்து பெருமாள் எழுந்தருளினார். பின்னர் பெரியாழ்வார் சாற்றுமுறை உற்சவமும் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சீனிவாசன் தலைமையில் கோவில் ஊழியர்கள் செய்து இருந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.