இரணியலில் கடன் தொல்லையால் தாய் மகன் தற்கொலை
இரணியலில் கடன் தொல்லையால் தாய் மகன் விஷம் குடித்து தற்கொலை
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அரசு மேல்நிலை பள்ளி அருகே சடவிளை தெருவில் வசித்து வருபவர் பிஜு பிரதீப் (35) அவரது தாயார் விலாசினி (65) ரெண்டு பேரும் சேர்ந்து ஊதுபத்தி, சாம்பிராணி, வாசனை திரவியங்கள் தயார் செய்து மொத்த விற்பனை செய்து வந்தனர். பிஜு புதிய வாகனம் வாங்கிய வகையில் கடன் பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று இரவு மணவாளக்குறிச்சியில் உள்ள உறவினர் ஒருவரிடம் செல்போனில் பேசிய பிஜு நானும் அம்மாவும் விஷம் குடித்து சாகப்போவதாக கூறியுள்ளார். இதனால் பதற்றம் அடைந்த உறவினர்கள் அருகில் உள்ள பிஜுவின் நண்பர்களுக்கு தகவல் கூறினார். அவர்கள் வீட்டில் வந்து பார்த்தபோது ரெண்டு பேரும் வாயில் நுரை தள்ளிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.
உடனே ரெண்டு பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் பிஜு ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதை அடுத்து விலாசினியை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் விலாசினியும் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
சம்பவம் குறித்து இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், விலாசினியின் கணவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். சமீபத்தில் அவரது மூத்த மகனும் இறந்துள்ளார். அதனால் தாய் மகன் இரண்டு பேரும் தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் தான் கடன் தொல்லையால் வருத்தத்தில் தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வருகிறது