நாமக்கல்:குரூப் 4 தேர்வு முன்னேற்பாடுகள் ஜரூர் - மாவட்ட ஆட்சியர் தகவல்
நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 174 தேர்வு மையங்களில் 51,433 தேர்வர்கள் போட்டி தேர்வினை எழுத தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா தலைமையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தொகுதி - 4 (Group- IV) போட்டித்தேர்வு வருகின்ற ஜூன்-9 நடைபெறவுள்ளதை முன்னிட்டு, முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசுகையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தொகுதி - 4 (Group- IV) பணிக்கான போட்டித்தேர்வுகள் வருகிற (ஜூன் 9) ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 க்கு தொடங்கி 12.45 மணி வரை நடைபெற உள்ளது. நாமக்கல் வட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 39 தேர்வு மையங்களில் 12,073 தேர்வர்களும், மோகனூர் வட்டத்தில் வட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 8 தேர்வு மையங்களில் 2,229 தேர்வர்களும், சேந்தமங்கலம் வட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 17 தேர்வு மையங்களில் 4,562 தேர்வர்களும், இராசிபுரம் வட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 44 தேர்வு மையங்களில் 13,355 தேர்வர்களும், பரமத்தி வேலூர் வட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 21 தேர்வு மையங்களில் 5,872 தேர்வர்களும், திருச்செங்கோடு வட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 35 தேர்வு மையங்களில் 10,405 தேர்வர்களும், குமாரபாளையம் வட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 10 தேர்வு மையங்களில் 2,937 தேர்வர்களும் என நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 174 தேர்வு கூடங்களில் 51,433 தேர்வர்கள் போட்டி தேர்வினை எழுத தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இத்தேர்வுகளின் கண்காணிப்பு பணிகளில், 174 தேர்வு மையங்களிலும் 1 முதன்மை கண்காணிப்பாளரும், 15 பறக்கும்படைகள், 7 வட்டம் வாரியாக கண்காணிப்பு அலுவலர்கள், 44 நடமாடும் குழுக்கள், 174 ஆய்வு அலுவலர்கள், 1 மையத்திற்கு தலா 1 ஆயுதம் ஏந்திய காவலர்கள் வீதம் 174 காவலர்கள் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் நடமாடும் குழுவினர் வினாத்தாள்கள் உள்ளிட்ட தேர்வு பணி பொருட்களை தேர்வுமையங்களுக்கு கொண்டு செல்லுதல் மற்றும் விடைத்தாள்களை பெற்று வருதல் ஆகிய பணிகளை மேற்கொள்ள உள்ளார்கள். இந்த தேர்வுகளை எழுதும் தேர்வர்கள், தேர்வு மையத்திற்கு காலை 8.30 மணிக்கே தவறாமல் வந்து விடவேண்டும்.
தேர்வர்களின் புகைப்படம், பெயர், பதிவு எண் உள்ளிட்ட விவரங்கள் சரிபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். 9.00 மணிக்கு தேர்வு மைய கதவுகள் பூட்டப்படும் என்பதால் அதற்கு முன் வரும் தேர்வர்கள் மட்டுமே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். தேர்வு மையங்களுக்கு தேர்வர்கள் செல்ல வசதியாக அனைத்து தேர்வு மையங்களிலும் அரசு பேருந்துகள் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு நாளன்று தேர்வு மையங்களில் தேவையான அடிப்படை வசதிகளை வழங்கிட வேண்டும். தடையில்லா மின்சாரம் வழங்கிட வேண்டும். தேர்வு மையங்களுக்கு உரிய காவல் துறை பாதுகாப்பு வழங்கிட வேண்டும்.நாமக்கல் மாவட்டத்தில் தேர்வு பணிகளில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகளை சரியாக மேற்கொண்டு, சிறப்பாக பணியாற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பேசினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன், வருவாய் கோட்டாட்சியர்கள் (நாமக்கல்) ஆர்.பார்தீபன், சே.சுகந்தி (திருச்செங்கோடு), இணைபதிவாளர், கூட்டுறவு சங்கங்கள் க.பா.அருளரசு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ச.பாலாகிருஷ்ணன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மண்டல மேலாளர் செல்வராணி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் வெ.முருகன், உதவி ஆணையர் தொழிலாளர் நலன் திருநந்தன், ஆவின் பொது மேலாளர் ஆர்.சண்முகம், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய பிரிவு அலுவலர் கே.எ.ராஜூ, உதவி பிரிவு அலுவலர்கள் எம்.கருப்புசாமி, டி.சந்தோஷ்குமார் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.