நவராத்திரி சிலைகளுக்கு குழித்துறையில் மரியாதை
நவராத்திரி சிலைகளுக்கு குழித்துறையில் மரியாதை செய்யப்பட்டது.
By : King 24x7 Website
Update: 2023-10-28 10:51 GMT
திருவனந்தபுரம் கிழக்கு கோட்டையில் நடைபெறும் வரலாற்று சிறப்புமிக்க நவராத்திரி விழாவிற்கு கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரத்திலிருந்து சரஸ்வதி தேவியும், வேளி மலையிலிருந்து முருகனும், சுசீந்திரத்திலிருந்து முன் உதித்த நங்கையம்மனும் ஆண்டுதோறும் பவனியாக கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கடந்த 12-ம் தேதி நவராத்திரி பவனி பத்மநாபபுரத்திலிருந்து தொடங்கியது. திருவனந்தபுரம் சென்று அடைந்த விக்கிரகங்களை வைத்து, 9 நாள் நவராத்திரி பூஜை நடந்தது. நேற்று முன்தினம் சுவாமி விக்ரங்கள் குமரிக்கு புறப்பட்டது. நேற்று காலை திரும்பி மாலையில் குமரி -கேரளா எல்லையான களியக்காவிளை வந்தடைந்தது. அங்கு இரு மாநில போலீஸ் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டு சுவாமி விக்ரகங்கள் மற்றும் உடைவாள், தமிழக இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மற்றும் தந்திரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் பவனியாக வந்த சாமி விக்கிரகங்கள், குழித்துறை மகாதேவர் கோவில் வளாகத்தில் உள்ள சாமுண்டேஸ்வரியம்மன் கோயில் வந்தடைந்தது. அதன் பின்னர் அங்கிருந்து குழித்துறை தாமிரபரணி ஆற்றில் சுவாமி விக்கிரகங்களுக்கு ஆராட்டு நடைபெற்றது. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இந்நிலையில் இன்று காலை சிறப்பு பூஜைகளுடன் சுவாமி புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் போலீஸ் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. இந்த சுவாமி விக்ரகங்கள் மதியம் பத்மநாபபுரம் வந்தடைந்தது. அதன் பின்னர் தேவாரக்கட்டு சரஸ்வதி தேவி சிலை பத்மநாபபுரம் சரஸ்வதி அம்மன் ஆலயத்திலும், குமாரகோவில் முருகன் விக்ரகம் குமாரகோவில் குமாரசாமி கோவிலிலும், முன்னுதித்த நங்கை அம்மன் விக்ரகம் சுசீந்திரத்திலும் கொண்டு வைக்கப்பட்டு வழக்கம்போல் பூஜைகள் நடைபெற உள்ளது.