ராசிபுரம் அருகே ரூ. 54 கோடியில் தலைமை மருத்துவமனை

ராசிபுரம் அருகே அணைப்பாளையம் பிரிவுச் சாலையில் ரூ. 54 கோடியில் தலைமை மருத்துவமனை கட்டும் பணிக்கு, வரும் 24ல் சுகாத்தாரத்துறை அமைச்சர் அடிக்கல் நாட்டுகிறார்.;

Update: 2024-02-20 11:52 GMT

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம், அணைப்பாளையம் பிரிவில், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை அமைவுள்ள இடத்தில் இன்று (20.02.2024) பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் உமா ஆகியோர் தலைமையில் புதிய மருத்துவமனை கட்டடம் அடிக்கல் நாட்டு விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புறவழிச்சாலை பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டு, ரூ.54.00 கோடி மதிப்பீட்டில் பொதுப்பணித்துறையினரால் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. வரும் 24ம் தேதி அன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், வனத்துறை அமைச்சர் மருத்துவர் மதிவேந்தன் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் உமா தலைமையில் ராசிபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்கள். ராசிபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் 300 படுக்கை வசதியுடன், மருந்தகம், சலவையகம், எக்ஸ்-ரே, எம்.ஆர்.ஐ ஸ்கேன், சிடி ஸ்கேன், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, இரத்த வங்கி, மகப்பேறு பிரிவு, குழந்தைகள் சிகிச்சை பிரிவு, பிரேத பரிசோதனை பிரிவு உள்ளிட்ட பல்வேறு மருத்துவ வசதிகளுடன் தரை தளம் மற்றும் 6 தளங்களுடன் 1,17,000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்படவுள்ளது.

இராசிபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை அருகில் உள்ள சேந்தமங்கலம், நாமகிரிப்பேட்டை, மங்கலபுரம், கொல்லிமலை, புதுச்சத்திரம், சேந்தமங்கலம், எலச்சிபாளையம் உள்ளிட்ட கடைக்கோடி பகுதியில் உள்ள பொதுமக்கள் மருத்துவ சிகிச்சைகள் பெற பயனுள்ளதாக இருக்கும். இம்மருத்துவமனை தேசிய நெடுஞ்சாலை அருகில் அமைவுள்ளதால் ஏதேனும் சாலை விபத்துகள் ஏற்பட்டால் உடனடியாக அவசர சிகிச்சை அளிக்கும் வகையிலும், பொதுமக்கள் எளிதில் வரும் வகையிலும் போக்குவரத்து வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

Tags:    

Similar News