பேராவூரணி அருகே புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை
திருமணம் ஆன இரண்டே மாதத்தில், பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், கழுமங்குடா பகுதியைச் சேர்ந்த மாதவன் (வயது 25), மீனவர். இவருக்கும், கட்டுமாவடி அருகே உள்ள செம்பியன் மாதேவிப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த, காளியப்பன் என்பவரது மகள் காமாட்சி (வயது 19), இவருக்கும் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இதையடுத்து காமாட்சி கணவருடன் கழுமங்குடாவில் வசித்து வந்தார். இந்நிலையில், காமாட்சிக்குஅடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வயிற்று வலி தாங்காமல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காமாட்சி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, தகவலின் பேரில் சேதுபாவாசத்திரம் காவல்துறையினர் விரைந்து சென்று சடலத்தை மீட்டு, பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இறந்து போன காமாட்சியின் தாயார் லெட்சுமி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் ஆகி இரண்டு மாதங்களே ஆவதால், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அக்பர் அலி விசாரணை நடத்தி வருகிறார்.