டீசல் மானியத்திற்கு புதிய விதிமுறை - மீனவர்கள் அதிர்ச்சி

தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம் விசைப்படகு சங்க மீனவர்கள் மீன்வளத்துறை அறிவிப்பால் அதிர்ச்சியடைந்துள்ளனர். அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என சங்கத்தின் அவசரக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

Update: 2024-06-30 05:08 GMT

பைல் படம் 

தஞ்சை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் சங்க அவசர ஆலோசனைக் கூட்டம் சேதுபாவாசத்திரம் சங்க அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் ராஜமாணிக்கம் தலைமையில், தலைவர் மற்றும் உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெற்றது.  கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்,  "மீன்வளத்துறை, மீனவர் பெயரில் ஒரு படகு மட்டும் இருந்தால் மட்டுமே டீசல் மானியம் வழங்கப்படும் என்ற திடீர் அறிவிப்பால் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. குடும்பத்தில் தந்தையின் பெயரில் மூன்று, நான்கு படகுகள் இருக்கும் அவரது பிள்ளைகள், பெரியவர்கள் ஆன பிறகு தனித்தனியாக பிரித்து கொடுத்து தொழில் செய்வார்கள்.

இவற்றை எல்லாம் கணக்கில் கொள்ளாமல் ஒருவருக்கு ஒரு படகுக்குத் தான் டீசல் மானியம் என்ற அறிவிப்பு மீன்பிடித்தொழிலையே கேள்விக்குள்ளாக்கி விடும் உடனடியாக அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் . திடீர் அறிவிப்பால் மானிய விலை டீசல் கிடைக்காமல் பல படகுகள் தொழில் செய்ய முடியாத ஏற்பட்டு பலர் வேலை இழந்து வாழ்வாதார பிரச்சனை ஏற்படும் நிலை உள்ளதால் முதல்கட்டமாக பெயர் மாற்றம் செய்வதற்கு கால அவகாசம் கொடுத்து பிறகு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

தமிழகம் முழுவதும் மிகக் குறைந்த அளவே படகுகள் மானிய திட்டத்தில் உள்ளதால் அரசுக்கு பெரிய இழப்பாக கருதாமல் மீனவர்களின் வாழ்வாதாரத்தை கணக்கில் கொண்டு கால அவகாசத்துடன் தகுதி உள்ள குடும்ப உறுப்பினர்கள் பெயரில் பெயர் மாற்றம் செய்த பிறகு, புதிய உத்தரவை நிறைவேற்ற வேண்டும்.  கடந்த வாரம்  மல்லிப்பட்டினத்திலிருந்து நான்கு மீனவர்களுடன் கடலுக்கு சென்ற கண்ணாடியிழை படகு கவிழ்ந்து மூன்று பேர் உயிர் தப்பிய நிலையில் அந்தோணி என்ற மீனவரை மட்டும் காணவில்லை. அவரை மீட்டுத் தரவும் அவரை இழந்து வாடும் குடும்பத்திற்கு அரசு முதல்வர் நிவாரண நிதியிலிருந்து நிவாரணம் வழங்க வேண்டும்"  மேற்கண்ட தீர்மானங்களை  வலியுறுத்தி வருகின்ற ஜூலை 10ஆம் தேதி தஞ்சை ஆட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருப்பது என்றும், ஜூலை 12 ஆம் தேதி கிழக்கு கடற்கரை சாலையில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வாழ்வாதாரம் கேட்டு சாலை மறியல் செய்வது" என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன . கூட்டத்தில் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News