அருப்புக்கோட்டை நகராட்சி நெசவாளர் காலனியில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்; சமூக ஆர்வலர் ஆதங்கத்துடன் வெளியிட்ட வீடியோ வைரல் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சி நான்காவது வார்டு நெசவாளர் காலனி பகுதியில் கடந்த பத்து நாட்களுக்கு மேலாக குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாக செல்கிறது. இந்த குடிநீர் குழாய் உடைந்து வீணாவதை அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் பத்து நாட்களுக்கு மேலாக இங்கு குடிநீர் வீணாவதாகவும் அதை சரி செய்யக்கூடிய கவுன்சிலர் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், இதை வீடியோவாக வெளியிடும்போது இதெல்லாம் உனக்கு தேவையான என என்னை கவுன்சிலர் கேட்பார் எனவும், கவுன்சிலர் என்பவர் குடும்பத்தில் ஒருவராக இருக்க வேண்டியவர் எனவும் இங்கு உள்ள நிறை குறைகளை அமைச்சரிடம் தெரிவிக்க வேண்டும் எனவும், ஆனால் அவர் அதைக் கண்டு கொள்வதில்லை எனவும் ஆதங்கம் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.