திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாகத்தையொட்டி பல்வேறு பகுதிகளிலிலுந்தும் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள். அலகுவேல் குத்தியும், காவடி சுமந்தும் பாதயாத்திரையாக வந்தும் கோவிலில் குவிந்த வண்ணம் உள்ளனர்.. முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நடைபெறக்கூடிய முக்கிய திருவிழாக்களில் ஒன்றான வைகாசி விசாக திருவிழா இன்று வெகுவிமர்சையாக கொண்டாடப்படுகிறது. முருகப்பெருமான் பிறந்த நட்சத்திரமான விசாக நட்சத்திரத்தை யொட்டி வைகாசி மாதம் வரக்கூடிய விசாக நட்சத்திரத்தன்று வைகாசி விசாக திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நள்ளிரவு 01-00 மணிக்கு நடைதிறக்கப்பட்டு 01-30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 06-00 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிசேகமும் நடைபெற்றது. தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடைபெற்று வருகிறது. வைகாசி விசாகத்தையொட்டி தமிழகம் மட்டுமல்லாமல் பாண்டிச்சேரி, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.மேலும் இராமநாதபுரம், தென்காசி, ராஜபாளையம், விரருதுநகர், கன்னியாகுமரி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் அலகுவேல் குத்தியும், காவடி சுமந்தும் அரோகரா கோசம் முழங்க பாதயாத்திரையாக வந்து குவிந்த வண்ணம் உள்ளனர். வைகாசி விசாகத்திற்கு விரதம் இருக்கும் பக்தர்கள் கோவிலில் தங்களது நேர்த்திக் கடன்களை செலுத்தி முருகப்பெருமானை வழிபட்டால் நினைத்த காரியங்கள் கைகூடும் என்பதால் வரக்கூடிய பக்தர்கள் கோவில் வளாகத்தில் தங்கியிருந்து முருகனை தரிசனம் செய்து விட்டு செல்வது வழக்கம். இதனால் கடற்கரை பகுதி முழுவதும் பக்தர்களின் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. பக்தர்கள் அதிகாலை முதல் குடும்பத்துடன் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் லட்சக்கணக்கான பக்தர்களின் வருகையால் திருச்செந்தூர் நகரமே திருவிழாக்கோலம் பூண்டுள்ளது. பல லட்சக்கணக்கான பக்தர்கள் வரக்கூடிய நிலையில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறைவாக உள்ளதாக பக்தர்கள் குற்றம் சாட்டினர். மேலும் வைகாசி விசாகத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது..