காமராஜருக்கு பெருமை சேர்த்தவர் கலைஞர் என்று தூத்துக்குடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.;

Update: 2025-07-26 09:50 GMT
தூத்துக்குடி பசுமை புரட்சி காமராஜர் இயக்கத்தின் 4ம் ஆண்டு துவக்க விழா காமராஜர் 123வது பிறந்தநாள் விழா பிரையண்ட்நகர் காமராஜர் மண்டபத்தில் நடைபெற்றது. பசுமை புரட்சி காமராஜர் இயக்க ஓருங்கிணைப்பாளரும் தெற்கு மண்டல காங்கிரஸ் தலைவருமான ராஜன் தலைமை வகித்தார். மாநகர் மாவட்ட துணை தலைவர் பிரபாகரன் மண்டலத்தலைவர் செந்தூர்பாண்டி முத்துராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்க்கஸ் வரவேற்புரையாற்றினார். விழாவில், வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள், இரண்டு பேருக்கு கல்வி உதவித்தொகை வழங்கி பேசுகையில் காமராஜர் 9 ஆண்டுகாலம் முதலமைச்சராக பணியாற்றினார். எல்லோரும் பாராட்டும் வகையில் நேர்மையாகவும் அனைவரும் ஏற்றுக்கொண்ட தலைவராகவும் பலதியாகங்களை செய்து வாழ்ந்தவர் அவருடைய வரலாறு அடுத்த தலைமுறையினருக்கு தெரிய வேண்டும். 1949ல் திமுக தொடங்கிய காலத்தில் காங்கிரஸ் எதிர்ப்பில் இருந்தது அப்போது பெரியார் அண்ணா அவர்களோடு இணைந்து கலைஞர் பச்சை தமிழர் காமராஜர் முதல்வராக வரவேண்டும் என்ற விருப்பத்தை தெரிவித்ததுண்டு. அவர் காலத்தில் ஆடு மேய்த்து கொண்டிருந்த சிறுவனை பள்ளிக்கு செல்லவில்லையா என்று காமராஜர் கேட்ட போது நான் ஆடு மேய்தால் தான் எனக்கு வீட்டில் சாப்பாடு அம்மா தருவார்கள் இல்லை என்றால் கிடையாது என்று கூறியபோது நான் சாப்பாடு போட்டால் நீ படிக்க வருவாயா என்று கேட்டார். உடனே அவன் வருகிறேன் ஐயா என்று கூறியுள்ளார். அந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளிடம் காமராஜர் சொன்ன போது அரசாங்கத்தில் பணம் இல்லை என்று கூறிய நேரத்தில் நான் அதை செயல்படுத்திய தீருவேன். என்று பல்வேறு முயற்சிகள் மூலம் மதிய உணவு, திட்டத்தை செயல்படுத்தினார். அவருக்கு பின்னால் கலைஞர் முட்டையுடன் கூடிய சத்துணவு வழங்கப்பட்டு இன்று முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியில் காலை உணவு திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த மாதம் முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் வழங்கப்படும் இன்று இந்தியா முழுவதும் பள்ளிகளில் உணவு வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதற்கு வித்திட்டவர் காமராஜர். ராஜாஜி காலத்தில் குல கல்வி திட்டத்தின் மூலம் 6 ஆயிரம் பள்ளிகளை மூடினார். காமராஜர் 12 ஆயிரம் பள்ளிகளை திறந்து எல்லோரையும் படிக்க செய்வதற்கு அடித்தளம் அமைத்தார். இன்று முதலமைச்சர் ஸ்டாலின் எல்லோரும் உயர்கல்வி படிக்க வேண்டும் என்று ஆயிரும் உதவித்தொகை வழங்கி இந்தியாவிற்கே தமிழகம் முதன்மை மாநிலமாக கல்வியில் சிறந்து விளங்குகிறது. ஒன்றிய அரசு பல்வேறு வகையில் நிதி தர மறுத்தாலும் தமிழக மக்கள் நலனில் முதலமைச்சர் அக்கறை செலுத்தி பணியாற்றுகிறார். பிஜேபி அரசு ஜாதி மதங்களை துண்டி விட்டு சதி வலை பின்னுகிறது. அதற்கு நாம் உடந்தையாகி விடக்கூடாது திமுக காங்கிரஸ் கூட்டணியை பிரிக்க வேண்டும் என்ற சதி திட்டத்தோடு காமராஜரை பற்றி இழிவாக பேசியதாக குழப்பத்தை ஏற்படுத்தி குளிர் காய நினைப்பவர்களுக்கு இடமளித்து விட கூடாது. காமராஜருக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக கடைபிடிக்க வேண்டும் என்று கலைஞர் அறிவித்த அறிவிப்பின் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் கொண்டாடப்படுகிறது. நான் 96ம் ஆண்டு மாவட்ட ஊராட்சி மன்ற தலைவராக இருந்த காலத்தில் கிராமங்கள் முதல் அனைத்து பகுதிக்கும் தேர்ந்தெடுத்த மக்கள் பிரதிநிதிக்கு இருக்கின்ற அதிகாரத்தை பகிர்ந்தளிக்க வேண்டும். என்று செயல்பட்டோம் ஆனால் இப்போது பிஜேபி அரசு அதிகாரத்தை தன் பக்கம் குவித்துக் கொண்டு மற்றவர்களை பல்வேறு வகையில் பழிவாங்கி வருகிறது. 2026ல் நடைபெறவுள்ள தேர்தலில் ஜாதி மதம் என்று பாராமல் சமத்துவமாக எல்லோரும் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் திமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று பேசினார். விழாவில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநில காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் சண்முகம், மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன், செயலாளர் விஜயராஜ், பொருளாளர் காங்கிரஸ் எடிசன், அமைப்பு சாரா அணி மாவட்ட தலைவர் நிர்மல் கிறிஸ்டோபர், மாநில மகிளா காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் எலிசபெத் ராஜன், ஐஎன்டியுசி மாநில அமைப்பு செயலாளர் ராஜ், கவுன்சிலர் சந்திரபோஸ், முன்னாள் கவுன்சிலர் இசக்கிமுத்து, திமுக பகுதி பிரதிநிதி செல்வம், வட்டப்பிரதிநிதி பாஸ்கர், காங்கிரஸ் நிர்வாகிகள் பெர்த்தினாள் தார்சியஸ், தனபால்ராஜ், காமாட்சி தனபாலன், மாநகர திமுக இளைஞர் அமைப்பாளர் அருண்சுந்தர், பகுதி செயலாளர் ராமகிருஷ்ணன், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், மணி அல்பட் உள்பட பலர் கலந்து கொண்டனர். அகஸ்டின் நன்றியுரையாற்றினார்.

Similar News