Update: 2025-09-26 13:29 GMT
அருப்புக்கோட்டை அருகே மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் கட்டிடக்கழிவுகள் எடுத்துச் சென்ற லாரி திடீரென தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு; தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்ப்பு விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் இருந்து கட்டிட கழிவுகளை ஏற்றிக்கொண்டு டிப்பர் லாரி ஒன்று அருப்புக்கோட்டை புறவழிச்சாலை வழியாக பாளையம்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தது.‌ லாரியை நரிக்குடியை சேர்ந்த பெருமாள் என்பவர் ஓட்டிச் சென்றார். அப்போது மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் லாரி சென்று கொண்டிருக்கும்போது பாளையம்பட்டி முத்தரையர் நகர் விலக்கு பகுதியில் திடீரென லாரியின் கேபின் பின் பகுதியில் இருந்து புகை கிளம்பி உள்ளது. இதனையடுத்து லாரி ஓட்டுநர் லாரி ஓரமாக நிறுத்தி தீ பிடிக்கதவாறு மண்ணை போட்டு தீ விபத்து ஏற்படாமல் தடுக்க முயன்றுள்ளார். ஆனால் திடீரென லாரியின் கேபின் பகுதி முழுவதும் தீ பிடித்து எரிந்துள்ளது. அங்கிருந்தவர்கள் உடனடியாக அருப்புக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த அருப்புக்கோட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து லாரியின் முன்பகுதியில் பற்றி எரிந்த தீயை அனைத்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். நல்வாய்ப்பாக இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.‌ புகை கிளம்பியுடன் லாரி ஓட்டுநர் லாரியை சாலை ஓரமாக நிறுத்தியதாலும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்ததாலும் தேசிய நெடுஞ்சாலையில் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.‌ இந்த இந்த சம்பவம் குறித்து அருப்புக்கோட்டை நகர் காவல் நிலைய போலீசார் வயர்கள் உராய்வு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா இல்லை வேறு‌ காரணமா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.‌

Similar News