தொழிலாளர்களின் கவனச்சிதறலே தொழிலக விபத்துகளுக்கு காரணம்
Update: 2023-12-03 08:07 GMT
தொழிற்சாலைகளில் உள்ள 'பெயின்ட் ஷாப்' மற்றும் 'இன்ஜெக் ஷன் மோல்டிங் மிஷின்'களில் பணியாற்றும் தொழிலாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, நேற்று நடந்தது. காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில் உள்ள, 'சியோன் இ - ஹவா ஆட்டோமோட்டிவ் இந்தியா' என்ற நிறுவனத்தின் தொழிற்சாலையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், தமிழக தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனர் செந்தில்குமார், பாதுகாப்பு குறித்த பயிற்சி கையேடுகளை, தொழிலார்களுக்கு வழங்கினார். பின், அவர் பேசியதாவது: தொழிற்சாலைகளில் பணியாற்றும் பெரும்பாலான தொழிலாளர்களுக்கு கவனச்சிதறலும் அதீத நம்பிக்கையும் உள்ளது. மேலும், இயந்திர பிரிவில் பணியாற்றுவோர், அவர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்களை அணிவதிலும் அலட்சியமாக உள்ளனர். இதனால், பெரும்பாலும் விபத்துகள் ஏற்படுகின்றன. இதை தவிர்க்க, தொழிலாளர்கள் அனைவரும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்; கவனமாக பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்