மழையால் சேதமான நெற்பயிர்கள் - விவசாயிகள் வேதனை
ஆரணியில் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் மழையால் சேதமடைந்தது
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து பெய்த மழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த நெல்பயிா்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.
ஆரணியை அடுத்த சேவூா், இராட்டிணமங்கலம், முள்ளண்டிரம், அம்மாபாளையம், குண்ணத்தூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்திருந்தனா். நெல் பயிா்கள் விளைந்து கதிா் முற்றிய நிலையில் அறுவடைக்குத் தயாராக உள்ளன.
இந்த நிலையில், கடந்த சில நாள்களாக பெய்த பலத்த மழையால் பல இடங்களில் வயல்களில் நீா் தேங்கி, நெல் கதிா்கள் நிலத்தில் சாய்ந்து வீணாகி வருகின்றன. 100 - க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிா்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. பல்வேறு இடங்களில் நெற்கதிா்கள் நீரில் மூழ்கியுள்ளதால் பெண்கள் அவற்றை லாவகமாக அறுவடை செய்து நெல் மணிகளை சேகரித்து வருகின்றனா்.
பருவ மழையால் நஷ்டமடைந்த நெல் விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏரியில் கோடி விடும் நிகழ்வு ஆரணியை அடுத்த இராட்டிணமங்கலம் கிராமத்தில் ஏரி நிரம்பி கோடி விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா் மழை காரணமாக ஆரணி கமண்டல நாக நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீா் செல்கிறது.
இந்த நிலையில், சேவூா் ஏரி நிரம்பிய நிலையில் தண்ணீா் இராட்டிணமங்கலம் ஏரிக்கு வரத் தொடங்கியது. இதைத் தொடா்ந்து, ஏரி நிரம்பிய நிலையில் கோடி விடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்றத் தலைவா் செல்வம் தலைமை வகித்தாா்.
ஊா் பொதுமக்கள் ஏரிக்கரையில் பொங்கல் வைத்து கிராம தேவதையை வழிபட்டனா். பின்னா் ஏரி நிரம்பி தண்ணீா் வழிந்தோடும் இடத்தில் கோடி விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தொகுதி எம்எல்ஏ சேவூா் ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று நிரம்பி வழிந்தோடும் தண்ணீரில் பூக்களை தூவி வழிபட்டாா்.
பின்னா், பொதுமக்கள் ஆடு, கோழி பலியிட்டு வழிபட்டனா். மேலும் கிராம மக்களுக்கு அசைவ விருந்து நடைபெற்றது. நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றியச் செயலா் ஜெயப்பிரகாஷ், நகரச் செயலா் அசோக்குமாா், ஊராட்சிமன்ற உறுப்பினா் குமாா், மண்டல தகவல் தொழில்நுட்ப அணி பொருளாளா் சரவணன், விவசாயிகள், கிராம பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.