ஓய்வூதியர் கையெழுத்து இயக்கம்
தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 70 வயது நிறைந்த ஓய்வூதியர்களுக்கு 10 விழுக்காடு கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி உள்ளிட்ட ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூபாய் 7,850 வழங்க வேண்டும்.
மருத்துவத் திட்ட காப்பீட்டு குளறுபடிகளை ஆய்வுக்கு உட்படுத்தி முறையாக செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஒரு லட்சம் ஓய்வூதியர் கையெழுத்து பெறும் இயக்கம், கடந்த அக்டோபர் 15ஆம் தேதி தொடங்கி நவம்பர் 30ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது.
இதனொரு பகுதியாக, பேராவூரணியில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்திற்கு மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஆர். ராஜகோபால் தலைமை வகித்தார். மாவட்ட தணிக்கையாளர் சமுதாக்கனி, வட்டத் தலைவர் கணே.மாரிமுத்து, வட்ட இணைச் செயலாளர் சுந்தரம், மாவட்டப் பிரதிநிதி கணேசன் உள்ளிட்டோர் ஓய்வூதியர்களை நேரில் தேடிச்சென்று கையெழுத்து பெற்றனர். இதேபோல் மாவட்டம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது. இதில், ஓய்வூதியர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.