பேராவூரணி ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம்

பேராவூரணியில் ஊராட்சி ஒன்றியக் குழு சாதாரண கூட்டம் நடந்தது.

Update: 2023-12-07 09:00 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஊராட்சி ஒன்றியக் குழு சாதாரணக் கூட்டம், ஆவணத்தில் உள்ள ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் தலைவர் சசிகலா ரவிசங்கர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தவமணி, பொய்யாமொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மனோகரன் வரவேற்றார். கூட்டத்தில், ஒன்றியக் குழு உறுப்பினர் உ.துரைமாணிக்கம் (அதிமுக) பேசுகையில், உறுப்பினர்களுக்கு பொது நிதியிலிருந்து அதிக அளவு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். பல்வேறு அரசு திட்டங்கள் வருகிறது. அதை உறுப்பினர்களுக்கு பகிர்ந்து வழங்க வேண்டும்.

பதவிக் காலம் முடிய இன்னும் ஓராண்டுகள் மட்டுமே உள்ளது. எனவே கூடுதலாக திட்டங்களை ஒதுக்கி தர வேண்டும்" என்றார்.  ஒன்றியக் குழு துணை தலைவர் ஆல்பர்ட் குணாநிதி (திமுக) பேசுகையில்,"புதிதாக பொறுப்பேற்றுள்ள வட்டார வளர்ச்சி அலுவலர் பொய்யாமொழியை வரவேற்கிறோம். உறுப்பினர்களுக்கு தெரியாமலேயே பல்வேறு திட்டங்கள் நடைபெறுகிறது. ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு தெரியும் திட்டங்கள், ஒன்றியக் குழு உறுப்பினர்களுக்கு தெரிவதில்லை. அனைத்து திட்டங்கள், வரும் வேலைகள் குறித்து உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். மக்கள் பிரதிநிதிகளுக்கு தேவையான திட்டங்களை விரைவுபடுத்தி வழங்க வேண்டும். புனல்வாசல் பகுதியில் 5 பள்ளிகள் உள்ளது. ஊரில் உரிய சாலை வசதி இல்லை. பலமுறை வலியுறுத்தியும் பணிகள் நடைபெறவில்லை. நூறுநாள் வேலைத் திட்டத்தில் சுழற்சி முறையில் பணித்தள பொறுப்பாளர்களுக்கு பணி வழங்க வேண்டும்" என்றார். 

உறுப்பினர் பெரியநாயகி (பாஜக) பேசுகையில், பள்ளி சாலை, அங்கன்வாடி கட்டிடம் பணி செய்து தரப்படவில்லை. மண் சாலை கூட அமைத்து தரப்படாமல் உள்ளது. பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் மத்திய அரசு நிதி, எவ்வளவு மாநில அரசு நிதி எவ்வளவு என தெரியவில்லை. பணிகள் முடியவில்லை. பலருக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, இதனை ஒழுங்குபடுத்த வேண்டும். பணிகள் ஒரே வார்டுகளுக்கே வழங்கப்படுகிறது. அனைத்து வார்டுகளுக்கும் பணிகளை பிரித்து வழங்க வேண்டும்" என்றார்.  தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் விளக்கம் அளித்துப் பேசினார். இதையடுத்து ஒன்றியக் குழு தலைவர் சசிகலா ரவிசங்கர் பதிலளித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில்," இருக்கும் நிதிநிலைமைக்கு ஏற்ப முன்னுரிமை அடிப்படையில், தேவையான பகுதிகளுக்கு பணி பிரித்து வழங்கப்படுகிறது. வரும் காலங்களில் உறுப்பினர்களின் கோரிக்கை அனைத்தும் நிறைவேற்றி தரப்படும். ஒத்துழைப்பு அளித்த உறுப்பினர்கள், அலுவலர்கள் அனைவருக்கும் நன்றி" என்றார். 

கூட்டத்தில், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் அமிர்த வள்ளி கோவிந்தராஜ், ரேவதி கண்ணன், ராஜலட்சுமி ராஜ்குமார், ராஜப்பிரியா, மாலா போத்தியப்பன், நவநீதம் ஆறுமுகம், பாக்கியம் முத்துவேல், சுந்தர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News