பேராவூரணி அருகே கிராம வேளாண் முன்னேற்ற குழுவிற்கான முன் பருவ பயிற்சி
பேராவூரணி அருகே கிராம வேளாண் முன்னேற்ற குழுவிற்கான முன் பருவ பயிற்சி அளிக்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டாரம், துறவிக்காடு ஊராட்சியில், வட்டார ஒருங்கிணைந்த வேளாண்மை தொழில்நுட்பக் குழு சார்பில், கிராம வேளாண் முன்னேற்றக் குழுவிற்கான முன் பருவ பயிற்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய கவுன்சிலர் அண்ணாதுரை முன்னிலை வகித்தார்.
அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் பொன். செல்வி பேசுகையில், 'வெளிமாநிலப் பயிற்சி, உள் மாவட்ட பயிற்சி, கண்டுணர்வு சுற்றுலா, செயல் விளக்கங்கள் ஆகிய அட்மா திட்டங்கள் பற்றி எடுத்துக் கூறினார்.
பேராவூரணி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் எஸ்.ராணி பேசுகையில், "வட்டார விவசாயிகளுக்கு முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் ஏக்கருக்கு 20 கிலோ வீதம் தக்கைப் பூண்டு விதைகள் 50 சத மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. இவற்றை நெல் சாகுபடிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். தென்னைக்கு பயன்படுத்தக் கூடாது. வேளாண்மை துறையின் கீழ் வழங்கப்படும் பல்வேறு நலத்திட்டங்களை பயன்படுத்தி விவசாயிகள் பயன்பெற வேண்டும்
இயற்கை உரங்களை பயன்படுத்தி நஞ்சு இல்லா உணவுகளை உற்பத்தி செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு குறுவை சாகுபடிக்கு தேவையான விதைநெல், உயிர் உரங்கள் இருப்பு உள்ளதாகவும், ரசாயன உரங்களை பயன்படுத்துவதை குறைத்து பசுந்தாள் உரங்களை பயன்படுத்துவதால் விவசாயத்திற்கான மண் வளம் மற்றும் மனித வளம் மேம்படும்" என்றார்.
கால்நடைத்துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து கால்நடை உதவி மருத்துவர் ஜோதிகா எடுத்துக் கூறினார். வேளாண்மை துணை அலுவலர் கோவிந்தராஜ், பட்டுக்கோட்டை இளநிலை பொறியாளர் எஸ்.செந்தில்குமார் கலந்து கொண்டு பேசினார்.
இப்பயிற்சியில், அட்மா உழவர் நண்பர் சேகர், திமுக பேராவூரணி வடக்கு ஒன்றிய செயலாளர் ஜி.இளங்கோவன் மற்றும் 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
பயிற்சிக்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் பொன். செல்வி, வட்டார உதவி தொழில்நுட்ப மேலாளர் கு. நெடுஞ்செழியன், த.சத்யா ஆகியோர் செய்திருந்தனர். நிறைவாக உதவி வேளாண்மை அலுவலர் கவிதா நன்றி கூறினார்.