பேருந்து நிலையம் அமைக்க வேண்டி பொதுமக்கள் கோரிக்கை

செங்கல்பட்டு மாவட்டம்,மானாமதி பகுதியில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update: 2024-04-15 10:58 GMT
பேருந்து நிலையம் அமைக்க வேண்டி பொதுமக்கள் கோரிக்கை

திருப்போரூர் அடுத்த மானாமதி ஊராட்சியில் அடங்கிய ஆமையம்பட்டு, சந்தனாம்பட்டு, பெரியார் நகர் உள்ளிட்ட கிராமங்களில், 5,000த்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு, அரசு மேல்நிலைப் பள்ளி, காவல் நிலையம், கூட்டுறவு வங்கி, ஐ.ஓ.பி., வங்கி, வருவாய் ஆய்வாளர் அலுவலகங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வணிக கடைகள் உள்ளிட்டவை உள்ளன. இங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு, சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் வருகின்றனர். பல்வேறு தேவைகளுக்கும் சுற்றுவட்டார கிராம மக்கள் வந்து செல்கின்றனர்.

Advertisement

இங்கிருந்து அடையாறு, தாம்பரம், திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு ஆகிய முக்கிய பகுதிகளுக்கு, அரசு போக்குவரத்து கழக பேருந்துகளும், மாநகர பேருந்துகளும் இயங்குகின்றன. இந்நிலையில், பேருந்துகள் வந்து பயணியரை ஏற்றிச் செல்ல, பேருந்து நிலையம் இல்லை. அங்குள்ள கூட்டுறவு வங்கி அருகே பேருந்தை நிறுத்தி ஏற்றிச் சென்றன. தற்போது, வங்கி நிர்வாகம் அந்த இடத்தில் சுற்றுச்சுவர் அமைத்துள்ளது. இதனால், பேருந்துகள் வங்கி அருகே சாலையில் நின்று, பயணியரை ஏற்றிச் செல்கின்றன. இதனால், காலை - மாலை வேளைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

மேலும், பயணியர் அமரவும், பேருந்தை நிறுத்தவும் இடமில்லை. மழை, வெயில் காலங்களில் பயணியர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இங்கு பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதிவாசிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் நேரடி கவனம் செலுத்தி, இப்பகுதியில் பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News