காங்கேயத்தில் வருவாய் தீர்ப்பாயத்தில் 256 மனுக்கள் பெறல்
காங்கேயம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 2ஆம் நாள் வருவாய் தீர்வாயத்தில் (ஜமாபந்தி) பொதுமக்களிடம் இருந்து 256 மனுக்கள் பெறப்பட்டது
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டாட்சியர் அலுவலகத்தில் திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் நேர்முக உதவியாளர் (நிலம்). மலர் தலைமையில் 2ஆம் நாள் வருவாய் தீர்வாயத்தில் (ஜமாபந்தி) பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் காங்கேயம் பகுதியிலுள்ள பொதுமக்களிடம் இருந்து 256 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் பெற்றுக் கொண்டார்.
திருப்பூர் மாவட்டத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்ளிலும் நேற்று முன்தினம் ஜூன் 20ஆம் தேதி முதல் 1433ஆம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) துவங்கியது. இந்த நிலையில் 2ஆம் நாளான நேற்று காங்கேயம் உள்வட்டத்திற்கு உட்பட்ட ஆரத்தொழுவு, குருக்கபாளையம், நிழலி, ஊதியூர், முதலிபாளையம், வடசின்னாரி பாளையம், சம்பந்தம் பாளையம் ஆகிய கிராமங்களில் இருந்து வந்த ஏராளமான பொதுமக்களிடம் இருந்து பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப் பட்டா, வாரிசுச் சான்று, பிறப்பு மற்றும் இறப்புச் சான்று, குடும்ப அட்டை,
சாதிச்சான்று, வருமானச் சான்று, முதல் பட்டதாரிச் சான்று, இருப்பிடச் சான்று, ஆதரவற்ற விதவைச் சான்று, கணினி சிட்டா பெயர் திருத்தம், மின்சார இணைப்பு, முதியோர் உதவித் தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, விதவை உதவித்தொகை, நில அளவை, குடிநீர், பொது சுகாதாரம், சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
மேலும் பெறப்பட்ட மனுக்களை தணிக்கை செய்த அதிகாரி மலர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் இந்த மனுக்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
மேலும் இந்நிகழ்ச்சியில், காங்கேயம் வட்டாச்சியர் மயில்சாமி, காங்கயம் வருவாய் ஆய்வாளர் விதுர்வேந்தன், கிராம நிர்வாக அலுவலர்கள், அரசு துறை சார்ந்த அதிகாரிகள் வட்டாச்சியர் அலுவலகர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டார்.