அத்துமீறல் பேனர் அகற்றம் - திரண்ட அதிமுகவினர்
செம்பனார்கோவிலில் அதிமுக பேனர் அப்புறப்படுத்தியதை கண்டித்து அதிமுகவினர் திரண்டதால் மீண்டும் அதே இடத்தில் பேனர் வைக்கப்பட்டது
மயிலாடுதுறை அருகே செம்பனார் கோயில் கீழ முக்கூட்டு பகுதியில் பகுதியில் அம்மா ஜெயலலிதா பிறந்தநாள் தொடர்பான பேனர் அதிமுக சார்பில் நேற்று வைக்கப்பட்டுள்ளது. அனுமதி பெறாமல் பேனர் வைக்கப்பட்டுள்ளதாக கூறி காவல் துறையினர் மறுநாள் பேனரை அவிழ்த்து கீழே இறக்கி வைத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த அதிமுகவினர் மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தலைமையில் கீழ முக்கட்டு பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட திரண்டு சென்றனர்.
தகவல் அறிந்து வந்த செம்பனார்கோவில் போலீசார் அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பேனர் அதே பகுதியில் வைக்கப்பட்ட நிலையில் நிர்வாகிகள் அனைவரும் கலைந்து சென்றனர். இதுகுறித்து காவல்துறையினர் கூறியதாவது, பேனர் வைப்பதற்கு விதிமுறைகள் அனைத்து கட்சியினருக்கும் தெரிவிக்கப்பட்டு இருப்பதாகவும், ஏற்கனவே தனியார் வைத்திருந்த பேனரை அதிமுகவினர் அகற்றிவிட்டு அந்த இடத்தில் வேறு பேனரை கட்டினர். அதிமுகவினர் உரிய அனுமதி பெறாததால் பேனர் அப்பகுதியில் இருந்து காவல் துறையால் அகற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவினர் அதே இடத்தில் பேனர் வைக்க கேட்டுக் கொண்டதால் அனுமதி அளிக்கப்பட்டது .அதன் பிறகு அதிமுகவினர் கலைந்து சென்றனர்.