தண்ணீர் வசதி ஏற்படுத்தி தர கோரிக்கை !
திருக்கோஷ்டியூர் அருகே தண்ணீர் வசதி ஏற்படுத்தி தர கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்;
By : King 24x7 Angel
Update: 2024-03-12 09:03 GMT
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூர் அருகே உள்ள சோலுடையான்பட்டி கிராமத்தில் 120க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் பல தலைமுறைகளாக குடிநீர் வசதி அரசுத் தரப்பில் செய்து தரப்படவில்லை. இதனால் குடிநீருக்காக வயல் வெளியை கடந்து, காட்டு வழியில் சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று மணிமுத்தாறு ஆற்று படுகையில் பல மணி நேரம் சிறிது சிறிதாக சுரக்கும் ஊற்றுநீரை எடுத்து வருகின்றனர். வெயில் தாக்கத்திலிருந்து காத்துக் கொள்ள, அதிகாலை மற்றும் மாலை வேலையில் பாதுகாப்பற்ற காட்டு வழி பாதையில் 4 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டும் என்பதால் 10 பெண்கள் ஒன்று கூடிதான் தண்ணீரை எடுக்க செல்கின்றனர். ஊற்றில் சில சமயங்களில் தண்ணீர் வற்றி விடுவதால் குறைவான நீரே ஊரும். இதனால் மணி கணக்கில் காத்திருந்து தண்ணீரை எடுத்து வரவேண்யுள்ளது. தற்பொழுது கோடை காலம் ஆரம்பித்துள்ளதால் ஒரு குடம் நீர் எடுக்க குறைநத பட்சம் ஒரு மணி நேரமாவது காத்துக்கிடக்க வேண்டிய சூழல் உருவாகும். இதனால் குழந்தைகள் பள்ளிக்கு அடிக்கடி விடுப்பு எடுக்க கூடிய சூழ்நிலை உருவாகிறது. அதோடு கை குழந்தைகள், வயதானவர்கள், உடல்நிலை சரியில்லாதவர்களை கவனிக்க முடியவில்லை. ஊருக்குள் அவ்வப்போது வாகனத்தில் கொண்டு வரப்படும் நீரை ரூ.12 முதல் ரூ.15 வரை கொடுத்து வாங்கி அருந்தினாலும், கல்லடைப்பு, நீர்க்கடுப்பு உள்ளிட்ட நோய்களால் அவதிப்பட வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே பல தலைமுறைகளாக தண்ணீர் காக அவதிப்படும் தங்களுக்கு அரசு நிரந்தர தீர்வை ஏற்படுத்தித் தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.