குமரி : பெண் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு - சாலை மறியல் .
ஆலய நிர்வாகத்திற்கும் இறந்தவர் குடும்பத்துக்கும் உள்ள பிரச்சனையால் அடக்கம் செய்ய எதிர்ப்பு ஏற்பட்டது
Update: 2023-12-15 03:40 GMT
கன்னியாகுமரி மாவட்டம் பிள்ளைத்தோப்பு பகுதி 6-ம் அன்பியத்தை சேர்ந்தவர் ஜெகன் மனைவி ரேவிதா (42). நேற்று முன்தினம் உடல்நல குறைவால் காலமானார். இதையத்து இவரது கண்கள் தானம் செய்யப்பட்டது. அவரது உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் அங்குள்ள கிறிஸ்தவ ஆலய பங்கு பேரவை நிர்வாகத்தை தொடர்பு கொண்டனர். ஆனால் ஆலய நிர்வாகத்திற்கும் இறந்தவர் குடும்பத்துக்கும் உள்ள பிரச்சனையால் அடக்கம் செய்ய எதிர்ப்பு ஏற்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்கள் நூற்றுக்கணக்கானவர்கள் காலையில் நாகர்கோவிலில் உள்ள கோட்டார் ஆயர் இல்லம், குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்து பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு ஏற்படவில்லை.இதை அடுத்து அங்கிருந்து சென்றவர்கள் பிள்ளை தோப்பில் உடலை அடக்கம் செய்ய வலியுறுத்தி, சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அடக்கம் செய்வதற்கு மீண்டும் பங்கு பேரவையினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதில் சுமூக முடிவு எட்டவில்லை. பின்னர் ரேவிதாவின் உறவினர்கள் அவரது சொந்த ஊரான மணவாளக்குறிச்சி சின்ன விளையில் உடலை அடக்கம் செய்ய முடிவு செய்து அங்கிருந்து உடலை ஆம்புலன்ஸில் சின்ன விளைக்கு எடுத்துச் சென்றனர். ஆனால் அங்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பின்னர் வளனார் நகரில் உள்ள அவரது உறவினர் ஒருவர் நிலத்தில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.