பட்டபகலில் திருட்டு - வாலிபர் கைது
கரூர் மாவட்டம்,தட்டாங்காடு பகுதியில் பட்டப்பகலில் வீட்டின் முன் கதவை உடைத்து இரண்டு பவுன் தங்க நகை, ரூ 10,000 களவாடிய வாலிபர் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் காவல் எல்லைக்குட்பட்ட, தட்டாங்காடு, பசுமை நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஷேக் அப்துல் காதர் வயது 41. இவர் பிப்ரவரி 5ஆம் தேதி காலை 11:00 மணி அளவில், தனது வீட்டை பூட்டிவிட்டு மருந்தகத்தில் மருந்து வாங்குவதற்காக சென்று உள்ளார். மீண்டும் மதியம் 3 மணி அளவில் வீடு திரும்பிய அவர், வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்த போது, பீரோவில் வைத்திருந்த இரண்டு பவுன் தங்க நகையும்,ரூபாய் 10,000 களவாடப்பட்டது கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து, வேலாயுதம்பாளையம் காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், இது தொடர்பாக மேற்கொண்ட விசாரணையில், கரூர் மாவட்டம், மன்மங்கலம் தாலுகா, கடம்பங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த சேகர் மகன் தர்மதுரை வயது 34 என்பவர் இந்த குற்ற செயலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், களவாடிய நகை மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், தர்மதுரை மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர். சிறையில் அடைக்கப்பட்ட தர்மதுரை மீது ஏற்கனவே கரூர், வாங்கல், வையம்பட்டி, நீடாமங்கலம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.