சேலத்தில் வாடகை கார் விற்பனையில் மோசடி செய்த நபர் மீது வழக்கு
சேலத்தில் வாடகை கார்களை விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்டு வந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
By : King 24x7 Angel
Update: 2024-03-21 08:47 GMT
நாமக்கல் மாவட்டம் வேனாத்தூர் பழைய போலீஸ் ஸ்டேஷன் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (43). சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ரோஷன் ஜாவித்(41) என்பவருடன் ராமச்சந்திரனுக்கு பழக்கம் ஏற்பட்டது. அப்போது தன்னிடம் உள்ள காரை ரூ.4.5 லட்சம் ரூபாய்க்கு வாங்கிக்கொள்ளும்படி ரோஷன் ஜாவித் ராமச்சந்திரனிடம் தெரிவித்தார். இதையடுத்து சேலம் கொண்டலாம்பட்டியில் இருவரும் சந்தித்து பேசினர். அதன்பின்னர் ரூ.3லட்சம் கொடுத்து காரை ராமச்சந்திரன் வாங்கினார். மீதம் உள்ள பணத்தை காருக்கான ஆவணங்களை கொடுக்கும் போது தந்தால் போதும் என ரோஷன் ஜாவித் தெரிவித்தார். இதையடுத்து மீண்டும் ராமச்சந்திரனை தொடர்புகொண்ட ரோஷன் ஜாவித், தன்னிடம் ரூ.2லட்சம் மதிப்பில் கார் ஒன்று உள்ளதாகவும், அதனை நீங்கள் வாங்கி கொள்கிறீர்களா எனவும் கேட்டுள்ளார். அப்போது ராமச்சந்திரன் தன்னிடம் ரூ.3லட்சம் தான் உள்ளது என தெரிவித்துள்ளார். அந்த பணத்தை கொடுத்து விட்டு காரை வாங்கி கொள்ளுங்கள் என்றும், மீதம் உள்ள பணத்தை ஆவணங்கள் கொடுக்கும் போதும் கொடுத்தால் போதும் எனவும் தெரிவித்துள்ளார். இதனால் ரோஷன் ஜாவித் மீது ராமச்சந்திரனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அவர் விசாரித்த போது, அந்த இரண்டு கார்களுக்கும் ரோஷன் ஜாவித் சொந்தக்காரர் இல்லை என தெரிந்தது. வாடகை கார்களை அவ்வாறு விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்டு வருவதும் தெரிந்தது. இதுபற்றி ராமச்சந்திரன் கொண்டலாம்பட்டி. போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் ரோஷன் ஜாவித் மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.