சேலம் மாவட்ட ஆட்சியர் சாலையில் நடந்து சென்ற சம்பவம்.....
காரில் டீசல் இல்லாத காரணத்தால் சேலம் மாவட்ட ஆட்சியர் சாலையில் நடந்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்ட ஆட்சியராக இருந்து வருபவர் பிருந்தா தேவி. தற்போது நாடாளுமன்ற தேர்தலில் மாவட்ட தேர்தல் அதிகாரியாகவும் உள்ளார். இவர் நேற்று இரவு 8.50 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியே புறப்பட தனது அறையில் இருந்து கீழே இறங்கி வந்தார்.
அப்போது தன்னுடைய கார் இல்லாததால், சற்று நேரம் காத்திருந்து பார்த்த மாவட்ட ஆட்சியர் திடீரென அலுவலக வளாகத்தில் இருந்து வெளியே நடக்க ஆரம்பித்தார். அப்போது மெயின் கேட் அருகே அவருடைய கார் திடீரென வந்து வளைந்து நின்றது.
உடனே மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி, `நீங்க ஏம்பா வந்தீங்க நான் நடந்தே போய்கிறேன்’ என்று கடிந்து விட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வள்ளுவர் சிலை வரை நடக்க ஆரம்பித்து விட்டார். பின்னர் விசாரித்ததில் மாவட்ட ஆட்சியரின் காரில் டீசல் இல்லாமல் இருக்க, டீசல் நிரப்ப கார் டிரைவர், குமாஸ்தா, முதன்மை பாதுகாவலர் சுகுமார் ஆகியோர் சென்றதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வள்ளுவர் சிலையில இருந்து சுகனேஸ்வரர் கோயில் வரையிலும் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி நடந்து சென்று கோயிலுக்குள் தரிசனத்திற்கு சென்று விட்டார். அதன்பின்னர் தரிசனம் முடிந்து மீண்டும் தனது காரில் ஏறிச் சென்றார்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவியிடம் பேசியபோது, “எப்போதும் நடந்து தான் கோயிலுக்கு செல்வேன். இறங்கி வந்தபோது கார் இல்லை. அதனால் நான் காரை எதிர்ப்பார்க்கவில்லை. நடந்தே செல்ல முடிவு செய்து நடக்க ஆரம்பித்தேன்” என்றார்.