தஞ்சாவூர் அருகே சாலை விபத்தில் சகோதரிகள் உயிரிழப்பு

தஞ்சாவூர் அருகே சாலை விபத்தில் சகோதரிகள் உயிரிழந்தனர்.;

Update: 2024-03-29 17:18 GMT

கோப்பு படம் 

தஞ்சாவூர் அருகே கோவிலூர் பகுதியில் கார் மோதி சகோதரிகள் இருவர் உயிரிழந்தனர். தஞ்சாவூர் மாவட்டம், அம்மாப்பேட்டை அருகே கோவிலூர் கள்ளிமேடு பகுதியை சேர்ந்தவர் சின்னப்பா (59 ). இவரது மனைவிகள்  செல்வராணி (55), ராணி(54). இவர்கள் இருவரும் சகோதரிகள்.

சின்னப்பா இரு மனைவிகளுடன் ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வருகிறார். செல்வராணியின் மகள் ராஜேஸ்வரி இவர் தனது கணவர் ராமச்சந்திரன் என்பவருடன், ஒரத்தநாடு அருகே உள்ள வெட்டிக்காடு கிராமத்தில் வசித்து வருகிறார். இவர்களது மகன் ஹரிஹரன் (10). ஹரிஹரன் கோவிலூர், கள்ளிமேட்டில்  உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி கோவிலூர் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

Advertisement

இந்நிலையில், வியாழக்கிழமை இரவு பள்ளி சார்பில் சுற்றுலா செல்வதற்காக ஹரிஹரன் வீட்டிலிருந்து புறப்பட்டுக் கொண்டிருந்தார். ஹரிஹரனை சுற்றுலா செல்லும் பேருந்தில் ஏற்றி விடுவதற்காக அவரது இரண்டு பாட்டிகளும் ஹரிஹரனை அழைத்துக் கொண்டு பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அவர்கள் கோவிலூர் பேருந்து நிறுத்தம் அருகே தஞ்சாவூர் - நாகை தேசிய நெடுஞ்சாலையை கடந்து சென்ற போது தஞ்சாவூரிலிருந்து, திருவாரூர் நோக்கி சென்ற கார் இவர்கள் மீது  மோதியது.  இதில் பலத்த காயமடைந்த செல்வராணி, ராணி இருவரும் அதே  இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த  ஹரிஹரனை அருகில் உள்ளவர்கள்  மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு ஹரிஹரனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற அம்மாப்பேட்டை காவல்துறையினர் செல்வராணி, ராணி ஆகியோர்களின் உடல்களை மீட்டு உடற்கூறாய்வு பரிசோதனைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவ்விபத்து குறித்து சின்னப்பா கொடுத்த புகாரின் பேரில், அம்மாப்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்தி விட்டு தலைமறைவான கார் ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News