நீர்வரத்து வசதியின்றி சோமநாதபுரம் குளம்
சோமநாதபுரம் குளத்திற்கு கால்வாய் மற்றும் தலைபாரம் பகுதியை துார்வாரி சீர் செய்ய கோரிக்கை எழுந்துள்ளது.
காஞ்சிபுரம்மாவட்டம் உத்திரமேரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட சோமநாதபுரத்தில் பேரூராட்சிக்கு சொந்தமான பொதுக்குளம்உள்ளது. இந்த குளத்திற்கு காக்கநல்லுார் விவசாய நிலங்கள் வழியாக அமைக்கப்பட்டுள்ள நீர்வரத்து கால்வாய் முக்கிய நீர் ஆதாரமாக இருந்து வருகிறது.
இந்நிலையில், உத்திரமேரூர் -- காஞ்சிபுரம் சாலை பணியின் போது, கால்வாய் இணைப்பு பகுதியான தரைப்பாலம் சீரமைக்கப்பட்டது. அப்போது தரைப்பாலத்தின் கால்வாய் பகுதி துார்ந்ததால் சோமநாதபுரம்பொது குளத்திற்கு தண்ணீர் வந்து சேராத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மழைக்காலத்தில் சோமநாதபுரம் பொதுகுளத்தில் போதுமான தண்ணீர் சேகரமாகாததால்,
கோடை காலத்திற்கு முன்பாகவே இக்குளம் வறண்டு போகிறது. எனவே, சோமநாதபுரம் குளத்திற்கு தண்ணீர் வந்தடையும் வகையில் காக்கநல்லுார் பகுதி கால்வாய் மற்றும் தலைபாரம் பகுதியை துார்வாரி சீர் செய்ய அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.