சாலையோர விளையாட்டு போட்டி - மாணவ மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு
பெரம்பலூரில் பள்ளி கல்வித்துறை சார்பாக மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
மாநில அளவிலான பாரதியார் தின, குடியரசு தின புதிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் சாலையோர மிதிவண்டி போட்டி நடைபெற்றது. பள்ளிக் கல்வித்துறையின் சார்பாக 2023-24 ஆம் கல்வியாண்டிற்கான மாநில அளவிலான பாரதியார் தின, குடியரசு தின புதிய விளையாட்டுப் போட்டிகளான ஜூடோ, வாள்சண்டை,மிதிவண்டி ஆகிய விளையாட்டுப் போட்டிகள் பெரம்பலூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் ஜனவரி 25ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதில் ஜனவரி 27 ஆம் தேதி இன்று சாலையோர மிதிவண்டி போட்டி நடைபெற்றது. இதில் 115 மாணவிகளும், 115 மாணவர்களும் ஆர்வமுடன் கலந்துக் கொண்டனர். மேலும் சாலையோர மிதிவண்டி போட்டியில், 38 -மாவட்டங்களிலிருந்து 14,17,19 வயதிற்குட்பட்ட பிரிவுகளில், பெண்களுக்கு ஐந்து, பத்து இருபது ஆகிய கிலோமீட்டர் தூரத்திலும் ஆண்களுக்கு 10, 20, 30 ஆகிய கிலோமீட்டர் தூரம் சைக்கிள் ஓட்டம் நடைபெற்றது.
துறையூர் சாலையில் செஞ்சேரியில் இருந்து களரம்பட்டி வரை இப் போட்டிகள் நடைபெற்றன. போட்டியினை அஸ்வின் குழுமத்தின்நிறுவன கணேசன் மற்றும் ஆலம்பாடி ஊராட்சி தலைவர் கல்பனா சீனிவாசன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.