மாணவர்கள் விரும்பும் பாடத்தை படிக்க அனுமதிக்க வேண்டும்: தஞ்சை மேயர்
மாணவர்கள் விரும்பும் பாடத்தை படிக்க அனுமதிக்க வேண்டும் என தஞ்சை மேயர் தெரிவித்துள்ளார்.
தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள மாநகராட்சி அறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கில் தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் அனைவரும் இணைவோம் அறிவியல் அறிவோம் என்ற நிகழ்ச்சி கடந்த 44 நாட்கள் நடந்தது. அதன் நிறைவு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- தஞ்சை மாநகராட்சியில் உள்ள பள்ளி மாணவர்கள் விண்வெளி பற்றி அறிந்து கொள்ள இந்த "அனைவரும் இணைவோம். அறிவியல் அறிவோம்" நிகழ்ச்சி கடந்த 44 நாட்கள் சிறப்பாக நடைபெற்றது.
இதில் டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த ஏறத்தாழ 12 ஆயிரம் மாணவ, மாணவிகள் கண்டு களித்துள்ளனர். அதில் தேர்வு செய்யப்பட்ட 47 மாணவர்கள் இஸ்ரோ அழைத்து செல்லப்பட உள்ளனர். மாணவர்கள், பெற்றோர்களை விட அதிக புத்திசாலிகளாக உள்ளனர்.
அதனால் மாணவர்களிடம் என்ன படிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தாதீர்கள். அவர்கள் விரும்பும் பாடத்தை படிக்க அனுமதியுங்கள்" இவ்வாறு அவர் கூறினார். பின்னர் மாணவர்களுக்கு பரிசாக மரக்கன்றுகளை மேயர் வழங்கினார்.