கந்தசாமி கோவிலில் தைப்பூச தேரோட்டம்
காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் தைப்பூச தேர்த்திருவிழாவில் ஏராளனமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
சேலம்- நாமக்கல் மாவட்ட எல்லையில் உள்ள காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் தைப்பூச தேர்த்திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றம் நடந்தது. நேற்று முன்தினம் இரவு 12 மணிக்கு வள்ளி, தெய்வானையுடன் கந்தசாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று தேரோட்டம் நடந்தது. இதையொட்டி காலை 5 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிேஷகம் செய்யப்பட்டது. தொடர்ந்து காலை 6 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. மதியம் 3.30 மணிக்கு ஈரோடு இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்சோதி, நாமக்கல் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சுவாமிநாதன், செயல் அலுவலர் மணிகண்டன், பரம்பரை அறங்காவலர் சந்திரலேகா ஆகியோர் தலைமையில் விநாயகர் தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து கோவிலை வலம் வந்தனர்.
தொடர்ந்து வள்ளி, தெய்வானை சமேத கந்தசாமி சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். பின்னர் சிறப்பு பூஜைகள் செய்து தேரோட்டம் தொடங்கியது. அப்போது கோவிலில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷங்கள் எழுப்பியபடி வடம்பிடித்து தேரை இழுத்தனர். தேரோட்டத்தின் போது பக்தர்கள் தங்கள் வயல்களில் விளைந்த தானியங்கள் மற்றும் உப்பு, மிளகு ஆகியவற்றை தேர் மீது வீசி நேர்த்திக்கடன் செலுத்தினர். தேரோட்டத்தை காண, சேலம், நாமக்கல், ராசிபுரம், மல்லசமுத்திரம், திருச்செங்கோடு, வெண்ணந்தூர், மல்லூர், இளம்பிள்ளை, காகாபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பாத யாத்திரையாகவும், பால், பன்னீர், இளநீர் புஷ்ப காவடிகளை எடுத்து வந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். பாத யாத்திரையாக வந்த பக்தர்களுக்கு ஆட்டையாம்பட்டி முதல் காளிப்பட்டி வரை வழி நெடுகிலும், தண்ணீர் பந்தல்களும் அன்னதான பந்தல்களும் அமைக்கப்பட்டு, நீர்மோர், அன்னதானம் வழங்கப்பட்டது. திருவிழாவையொட்டி துணை போலீஸ் சூப்பிரண்டுகள் இமயவரம்பன், விஜயகுமார் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.