நீதிமன்றத்தில் விஷம் குடித்த குற்றவாளி!
பாலியல் துன்புறுத்தல் வழக்கில் 24 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி நீதிமன்றத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த 17வயது மாணவியின் பெற்றோர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். அதன் காரணமாக தாயும் மகளும் தனியாக வசித்து வருகின்றனர். கடந்த 2022 டிசம்பர் மாதம் மகளுக்கு கடும் வயிற்று வலி ஏற்பட, அவர் குன்னூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவர் கருவுற்றிருந்தது தெரியவந்தது.
அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் மாணவியின் தாயார் இது குறித்து குன்னூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல் ஆய்வாளர் கோமதி தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர்.
இதில் குன்னூரை சேர்ந்த மரம் அறுக்கும் தொழிலாளி தம்பா என்ற குணசேகரன், 55. கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் மாணவியை பாலியல் ரீதியாக துனபுறுத்தியது தெரிய வந்தது. இதையடுத்து குணசேகரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப்பதிந்து கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்ட தம்பா என்ற குணசேகரன் ஜாமீனில் வெளியில் வந்தார்.
நீலகிரி மாவட்டம் ஊட்டி மகிளா நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதிபதி ஸ்ரீதரன் குற்றம் சாட்டப்பட்ட தம்பா என்ற குணசேகரனுக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 6000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார் . இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் செந்தில்குமார் ஆஜராகி வாதாடினார். இதையடுத்து குற்றவாளிக் கூண்டிலிருந்து, கைதிகள் காத்திருப்பு அறைக்கு போலீஸார் குற்றவாளியை அழைத்துச் சென்றனர்.
அப்போது ஏற்கனவே தனது பையில் கோதுமையுடன் விஷம் கலந்து கொண்டு வந்திருந்த தம்பா அதை குடிக்க முயற்சி செய்தார். போலீஸார் அதனை தட்டி விட முயன்ற போது ஒரு போலீஸின் கையை கடித்துவிட்டு விஷத்தை குடித்துள்ளார். மயங்கிய தம்பாவை போலீஸார் மீட்டு சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தினர். அங்கு குற்றவாளி தம்பாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தண்டனை அறிவிக்கப்பட்ட குற்றவாளி நீதிமன்றத்தில் விஷம் குடித்தது பெரும் பரபரப்பு ஏற்பட்டது.