இலங்கைத் தமிழர்களுக்காக கட்டப்படும் குடியிருப்புகளின் கட்டுமானப் பணிகளை ஆட்சியர் ஆய்வு செய்தார்
பெரம்பலூரில் இலங்கைத் தமிழர்களுக்காக கட்டப்படும் குடியிருப்புகளின் கட்டுமானப் பணிகளை ஆட்சியர் ஆய்வு செய்தார்
Update: 2024-03-04 06:18 GMT
பெரம்பலூர் மாவட்டம் இலங்கைத் தமிழர்களுக்காக கட்டப்படும் குடியிருப்புகளின் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பெரம்பலூர் ஒன்றியத்திற்குட்பட்ட, கவுள்பாளையம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மூலம் ரூ.3.60 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் இலங்கைத் தமிழர்களுக்கான நவீன வசதிகளுடனான 72 குடியிருப்புகள் கட்டும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், இலங்கையிலிருந்து கடல் கடந்து தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழர்களுக்கு, பாதுகாப்பான, கௌரவமான மேம்படுத்தப்பட்ட வாழ்க்கை அமைத்துத் தரப்படும் என27.08.2021 அன்று நடைபெற்ற சட்டமன்ற பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்தார். அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் வாழும் இலங்கைத் தமிழ் மக்களுக்காக ரூ.3.60 கோடி மதிப்பீட்டில் 1 தொகுப்பிற்கு 4 வீடுகள் வீதம் 72 வீடுகள் 18 தொகுப்புகளாக புதிதாக கட்டுவதற்கான பணிகள் போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் 18.11.2022 அன்று அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது. தற்போது பெரும்பான்மையான பணிகள் முடிவுற்றுள்ள நிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். குடியிருப்புகளுக்கு முறையாக குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளதா , தெரு விளக்குகள் மின்சார வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்பதை பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித் தலைவர் அடிப்படைவசதிகளில் எந்தக் குறைபாடும் இல்லாத வகையில் முழுமையாக பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்நிகழ்வின்போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லலிதா,மின்சார வாரிய உதவி பொறியாளர் முத்தமிழ்ச்செல்வன்,பெரம்பலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அறிவழகன், பெரம்பலூர் வட்டாட்சியர் சரவணன் உட்பட பலர் உடனிருந்தனர்.