காணாமல் போன மரங்களை கண்டுபிடித்து தர தேமுதிகவினர் கோரி போலீஸில் புகார்
குமாரபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட 33 வார்டு பகுதிகளிலும் உள்கட்ட அமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக, கடந்த 30 ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி கிடந்த சாலைகள் மற்றும் சாக்கடை கால்வாய்கள் புதிதாக கட்டும் பணி தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதன் காரணமாக குமாரபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட குடியிருப்பு பகுதிகளில் கடந்த 40 ஆண்டுகளாக நடப்பட்டு, பொதுமக்களுக்கு பயனளிக்க கூடிய வகையாக இருந்து வரும் மரங்களை மழை நீர் வடிகால்கள் கட்டுவதற்காகவும், சாலைகள் புதுப்பிப்பதற்காகவும், அனுமதி இன்றி மரங்களை வெட்டி எடுத்து விற்பனை செய்து விடுகின்றனர்.
இது குறித்து அவர்களிடம் கேட்டால் நகராட்சி ஆணையர் வெட்ட சொன்னதாக தெரிவிக்கின்றனர். நகராட்சி ஆணையர் இதற்கு முற்றிலும் மறுப்பு தெரிவிக்கின்றார். இதனால் குமாரபாளையம் தேமுதிகவினர் நகராட்சிக்கு உட்பட்ட ஆறாவது வார்டு பகுதியில் 40 ஆண்டுகள் பழமையான ஆறு மரங்களைக் காணவில்லை என காவல் ஆய்வாளரிடம் புகார் மனு அளித்தனர்.
போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததன் அடிப்படையில் தேமுதிக மாவட்ட பொருளாளர் மகாலிங்கம் தலைமையில், தேமுதிகவினர் குமாரபாளையம் நகராட்சியில் சாலைகள் பராமரிப்பதற்காகவும் சில மழைநீர் வடிகால்கள் கட்டுவதற்காகவும் மரங்களை வெட்ட கூடாது என மனு அளித்தனர்.
இந்த நிகழ்வின்போது, தேமுதிகவினர் தங்கள் கழுத்தினால் வெட்டப்பட்ட மரங்களின் கிளைகளை மாலையாக அணிந்து வந்து புகார் அளித்ததால் பெரும் பரபரப்பு நிலவியது.