கோவில் திருவிழா அலங்கார மின்விளக்குகளை சேதப்படுத்திய வாலிபர்

கன்னியாகுமரி மாவட்டம்,சூரங்குடியில் கோவில் திருவிழா அலங்கார மின்விளக்குகளை சேதப்படுத்திய வாலிபர் கிறிஸ்துவ குடிலுக்குள் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2024-03-29 06:25 GMT
விளக்குகளை சேதப்படுத்திய வாலிபர் 

குமரி மாவட்டம், நாகர்கோவில் அடுத்த வடக்கு சூரங்குடியில் பிச்சைகால சாமி கோவில் உள்ளது. இங்கு பங்குனி திருவிழா நேற்று தொடங்கி தொடர்ந்து மூன்று நாட்கள் நடந்து வருகிறது. இதையொட்டி கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் தோரணங்கள், ஒலிபெருக்கிகள், மின்விளக்கு அலங்காரங்கள் அமைக்கும் பணி நடந்தது.      

இந்த நிலையில் நேற்று மாலை ஒரு வாலிபர் மின் அலங்காரம், மின்விளக்கு  சாதனங்களை சேதப்படுத்திக் கொண்டிருந்தார். இதை பார்த்த பொதுமக்கள் அவரை பிடிக்க முயன்றனர். உடனே அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடி அருகில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்துக்குள் புகுந்து ஒளிந்து கொண்டார். இதை பார்த்த பொதுமக்கள் ஆலய வளாகம் முன்பு திரண்டனர். ஆலயத்தில் அப்போது பெரிய வியாழன் ஆராதனை நடந்து கொண்டிருந்ததால் அங்கிருந்தவர்கள் யாரும் இதை கண்டு கொள்ளவில்லை.      

ஆனால் அந்த நபரை பிடிக்க ஏராளமான பொதுமக்கள் ஆலயவளாகத்தில் குவிந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் அகில பாரத இந்து மகா சபா மாநில தலைவர் தா பாலசுப்பிரமணியன், மாநகராட்சி கவுன்சிலர் வீர சூரப் பெருமாள் உட்பட ஏராளமானவர்கள்  அங்கு திரண்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவானது.        

இதையடுத்து  தகவல் அறிந்த கன்னியாகுமரி போலீஸ் துணை சூப்பிரண்ட் மகேஷ்குமார் தலைமையில் போலீசார் அங்கு வந்து தொடர்ந்து ஆலயத்துக்குள் மறைந்திருந்த மர்ம வாலிபரை போலீசாரிடம் பொதுமக்கள் அடையாளம் காட்டினார்கள். இதை தொடர்ந்து அந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். அதன் பின்பு பொது மக்களுக்கும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News