கோடை விழாவையொட்டி ஏற்காட்டில் மலர் செடிகள் நடவு பணி தீவிரம்

ஏற்காட்டில் கோடை விழாவையொட்டி மலர் கண்காட்சி. இதனால் மலர் செடிகள் நடவு பணி தீவிரமாக நடைபெறுகிறது.

Update: 2024-02-23 08:50 GMT

கோடை விழாவையொட்டி ஏற்காட்டில் மலர் செடிகள் நடவு பணி தீவிரம்

ஏற்காட்டில் கோடை விழா மலர் கண்காட்சிக்காக தோட்டக்கலை பூங்காவில் ரோஜா உள்ளிட்ட மலர் செடிகள் நடவு மற்றும் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில், ஆண்டுதோறும் மே மாதத்தில் கோடை விழா மலர் கண்காட்சி நடத்தப்படும். இதுகுறித்து தோட்ட கலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: ஏற்காடு கோடை விழாவில், மலர் கண்காட்சிக்கு தேவைப்படும் மலர்ச்செடிகளை இப்போதே நடவு செய்ய தொடங்கியுள்ளோம். அண்ணா பூங்காவில் பால்சம், ஜீனியா, சால்வியா, டெல்பினியம், ஆஸ்டர், மேரிகோல்டு, சூரியகாந்தி ஆகிய மலர் விதைகள் 25 ஆயிரம் முதல் கட்டமாக விதைக்கப்பட்டுள்ளன. ஏற்காடு ரோஜா என்று அழைக்கப்படும் டேலியா கட்டிங்ஸ், 3ஆயிரம் எண்ணிக்கைக்கு மேல் மேட்டுப்பாத்திகளில் நடவு செய்யப்பட்டுள்ளன. மேலும், ரோஜா பூங்கா, அண்ணா பூங்கா, முதலாவது அரசு தாவரவியல் பூங்கா ஆகியவற்றில் 675 வகையான ரோஜா செடிகள் என மொத்தம் 6,750 எண்ணிக்கையில் நடவு செய்யப்பட்டு வருகிறது. ஏற்காட்டில் பருவமழை சீராக பெய்துள்ளதால், தற்போது தட்பவெப்ப நிலை சீராக உள்ளது. இதன் காரணமாக, தோட்டங்களில் வைத்துள்ள பூச்செடிகள் செழித்து வளர தொடங்கியுள்ளன. கோடை விழா தொடங்கும் போது, பூச்செடிகள் முழுமையாக வளர்ச்சியடைந்து, பூத்துக் குலுங்கி, சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமையும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News