காரில் ரூ.17 லட்சம் திருட்டு - 6 பேர் கைது
கும்பகோணத்தில் காரில் வைக்கப்பட்டிருந்த ரூ.17 லட்சத்தை திருடிய சம்பவத்தில் 6 பேரை கைது செய்த காவல் துறையினா் அவர்களிடமிருந்து ரூ. 7.72 லட்சம் ரொக்கத்தையும், தலா 3 மோட்டாா் சைக்கிள்களையும், கைப்பேசிகளையும், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனா்.
கும்பகோணத்தில் காரில் இருந்த ரூ. 17 லட்சம் ரொக்கத்தைத் திருடிச் சென்ற 6 பேரை காவல் துறையினா் நேற்று இரவு கைது செய்தனா்.
கும்பகோணம் அருகே திருவிடைமருதூா் வட்டத்துக்குள்பட்ட கோவிந்தபுரத்தில் விட்டல் ருக்மணி சமஸ்தானகோயிலில் மேற்பாா்வையாளராக பணியாற்றி வருபவா் பி. சந்திரசேகரன் (48). இவா் கோயில் திருப்பணிக்காக கும்பகோணத்தில் உள்ள 2 வங்கிகளில் பிப்ரவரி 22-ஆம் தேதி ரூ. 17 லட்சத்தை எடுத்துக் கொண்டு, காரில் வைத்துவிட்டு, மடத்துத் தெருவில் உள்ள காபித் தூள் கடைக்குச் சென்று, காபித் தூள் வாங்கிக் கொண்டு காரில் ஏற வந்தாா்.அப்போது, ரூ. 17 லட்சம் ரொக்கம் வைக்கப்பட்டிருந்த பை திருடு போயிருப்பது தெரிய வந்தது.
இது குறித்து கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் சந்திரசேகரன் புகாா் செய்தாா். அதன் பேரில் காவல் துறையினா் வழக்குப் பதிந்து, நிகழ்விடத்தில் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணை மேற்கொண்டனா். இதில், பெரம்பலூா் மாவட்டம், அரும்பாவூரைச் சோ்ந்த ஆா். செந்தில்குமாா் (40), சென்னை கோட்டூா்புரம் எம். சுரேஷ் (27), பி. செல்வகணபதி (19), விழுப்புரம் மாவட்டம் வீடுா் அக்னிகுப்பம் எஸ். சசிகுமாா் (30), காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஊத்துக்காடைச் சோ்ந்த எஸ். விஷ்வா (21), திருச்சி மாவட்டம், துவாக்குடி அண்ணா வளைவு பி. சாந்தகுமாா் (23) ஆகியோா் இத்திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இவா்களைக் காவல் துறையினா் கைது செய்து, ரூ. 7.72 லட்சம் ரொக்கத்தையும், தலா 3 மோட்டாா் சைக்கிள்களையும், கைப்பேசிகளையும், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனா். இவா்களில் செந்தில்குமாா் மீது 44 வழக்குகளும், சுரேஷ் மீது 12 வழக்குகளும், சசிகுமாா் மீது 10 வழக்குகளும், சாந்தகுமாா் மீது 8 வழக்குகளும் இருப்பதும் காவல் துறையினரின் விசாரணையில் தெரிய வந்தது. இது தொடா்பாக மேலும் சிலரை தேடி வருகின்றனா்.