பட்டாசு மருந்து வெடித்து 3 சிறுவர்கள் காயம்

சோளிங்கர் அருகே பட்டாசு மருந்து வெடித்து 3 சிறுவர்கள் காயமடைந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2024-05-17 17:13 GMT

சிறுவர்கள் காயம் 

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மகன்கள் லத்தீஷ் (8), அஸ்வந்த் (5). லத்தீஷ் 4-ம் வகுப்பும், அஸ்வந்த் 1-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.இவர்கள் இருவரும் தப்பூர் அடுத்த பழையபாளையம் மோட்டூரில் உள்ள தங்கள் பாட்டி வீட்டுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்றனர்.

பழையபாளையம் மோட்டூரில் கடந்த ஞாயிற்றுகிழமை அன்று நடைபெற்ற திருவிழாவில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டது.இதில் பட்டாசு வெடித்த காகிதங்களை சேகரித்து அதில் இருந்த வெடி மருந்துகளை எரித்து சிறுவர்கள் விளையாடியதாக கூறப்படுகிறது.

Advertisement

அப்போது எதிர்பாராத விதமாக வெடி மருந்து வெடித்ததில் லத்தீஷ், அஸ்வந்த் மற்றும் அதே கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் மகள் திவ்யா (11) ஆகிய மூவரும் படுகாயம் அடைந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காயம் அடைந்த சிறுவர்களை மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். லத்தீஷ், திவ்யா ஆகிய இருவரும் சோளிங்கர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

காலில் பலத்த காயம் அடைந்த அஸ்வந்த் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான்.இந்த சம்பவம் குறித்து பாணாவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News