நசுவினி ஆற்றை தூர்வாரி பராமரிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
ஆத்திக்கோட்டை, வெண்டாக்கோட்டை வழியாக செல்லும் நசுவினி ஆற்றை தூர்வாரி பராமரிக்க வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆத்திக்கோட்டை, வெண்டாக்கோட்டை வழியாக செல்லும் நசுவினி ஆற்றை தூர்வாரி பராமரிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். பட்டுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அக்னி ஆறு, பாட்டுவனாச்சி ஆறு, நசுவினி ஆறு, மகாராஜா சமுத்திரம், நரியாறு, பூனைக்குத்தியாறு,
குண்டலாறு உள்ளிட்ட ஆறுகள் செல்கின்றன. இந்த ஆறுகள் முழுக்க முழுக்க மழை நீரை ஆதாரமாக கொண்டு ஓடும் காட்டாறுகளாகும்.
இதற்கான மழை நீர் என்பது திருச்சி மாவட்டம் துவாக்குடி, திருவாரூர் மாவட்டம் வடுவூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கிடைக்கிறது. இந்த பகுதியில் பெய்யும் மழைநீரின் வடிகால்களாக காட்டாறுகள் செயல்படுகின்றன. காட்டாறுகளில் ஓடும் தண்ணீரை தேக்கி வைப்பதற்கு இதுநாள் வரை பெரிய அளவில் எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை என விவசாயிகள் தொடர்ந்து கவலை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
பட்டுக்கோட்டைக்கு மிக அருகில் கடற்கரை பகுதிகள் இருப்பதால் தற்போது முதல்சேரி, ராஜாமடம், பழஞ்சூர், புதுக்கோட்டை உள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீர் உப்பு தண்ணீராக மாறி வருகிறது. இதனால் பட்டுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் எதிர்காலத்தில் விவசாயம் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் விவசாயிகள் கூறுகிறார்கள். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், 'காட்டாற்றில் தண்ணீரை தேக்கி பம்பிங் சிஸ்டம் மூலம் அருகில் உள்ள கிராமங்களில் இருக்கும் ஏரி.
குளங்களை நிரப்பி நீர் ஆதாரத்தை பெருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்லணை கால்வாயில் வரும் உபரி நீரும் கடலில் கலந்து வீணாகி வருகிறது. வாய்க்கால்களில் வரும் தண்ணீரை வரும் வழியில் உள்ள குளம், குட்டை மற்றும் ஏரிகளில் நிரப்புவதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும். ஆத்திக்கோட்டை,
வெண்டாக் கோட்டை வழியாக செல்லும் நசுவினி ஆற்றை தூர் வாரி பராமரிக்க வேண்டும். வெண்டாக்கோட்டை பகுதியில் உள்ள நீர்பிடிப்பு பகுதியில் மண்டிக் கிடக்கும் புதர்களை அப்புறப்படுத்த வேண்டும். தரை பகுதியை ஆழப்படுத்தி, மழை நீரை சேமிக்கும் கொள்ளளவு திறனையும் அதிகப்படுத்த கரையினையும் பலப்படுத்தி மழை வேண்டும்' என்றனர்.