நீலகிரியில் அரசு வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில், அரசு வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
நீலகிரி மாவட்டத்தில் 3 வருவாய் கோட்டங்கள், 6 வருவாய் வட்டங்கள், 4 ஊராட்சி ஒன்றியங்கள், 88 வருவாய் கிராமங்கள், 35 ஊராட்சிகள் மற்றும் 11 பேரூராட்சிகள் உள்ளன. இங்குள்ள பொதுமக்கள் பல்வேறு தேவைகளுக்காக மனு அளிக்க ஆட்சியர் அலுவலகம் வருகின்றனர்.
மேலும் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஆதார் மையத்தில் ஆதார் பதிவு செய்தல், திருத்தம் மற்றும் பல்வேறு அரசு சேவைகளுக்கு விண்ணப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக தினசரி சுமார் 100 பேர் வந்து செல்கின்றனர். இதனால் ஆட்சியர் அலுவலக வளாகம் எப்போதும் கூட்டம் நிறைந்து காணப்படும்.
இவ்வாறு வரும் பொதுமக்கள் முறையாக வாகனங்களை நிறுத்த ஆட்சியர் அலுவலகத்தில் போதிய இட வசதி இல்லை. ஒரு சிலர் பழைய கோர்ட்டு வளாகத்தில் நிறுத்தி விட்டு வருகின்றனர். இந்நிலையில் நீலகிரி பழைய ஆட்சியர் அலுவலகத்தில் அவ்வப்போது அரசு அதிகாரிகளுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெறுகிறது. கலந்தாய்வு கூட்டம் ஒரு சில நாட்களில் 1 மணி நேரத்திற்கும் மேலாக கூட நடக்கிறது. இந்தக் கூட்டத்திற்கு ஆர்.டி.ஓ., தாசில்தார் என பல்வேறு அரசு அதிகாரிகள் அரசு வாகனங்களில் வருகின்றனர்.
இந்த வாகனங்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பகுதியில் சாலையோரத்தில் நிறுத்தப்படுகிறது. ஏற்கனவே சிறிய சாலை என்பதாலும் வாகன போக்குவரத்து அதிகம் இருக்கும் சாலை என்பதாலும், அரசு வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நிற்கிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். தனியார் வாகனங்கள் நிறுத்தினால் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் போலீஸார் அரசு வாகனங்கள் என்பதால் தயக்கம் காட்டுகின்றனர்.
எனவே அரசு வாகனங்களை ஆட்சியர் அலுவலகத்தின் உள்புறமாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ஆட்சியர் அலுவலக சாலையில் எந்த வாகனங்களில் இருந்து அனுமதிக்கக் கூடாது என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். .....