முப்பந்தல் அருகே தொழிலாளியிடம் பணம் பறித்த திருநங்கைகள்
முப்பந்தல் அருகே தொழிலாளியிடம் பணம் பறித்த திருநங்கைகளால் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியை சேர்ந்த தொழிலாளியான 45 மதிக்கத்தக்க நபர் வடக்கன்குளத்தில் பணியை முடித்துவிட்டு, நான்கு வழி சாலை வழியாக முப்பந்தல் அருகே தனது மோட்டார் சைகளில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலை ஓரமாக நின்று 2 திருநங்கைகள் திடீரென அவரின் மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தினர்.
பிறகு இருவரும் சேர்ந்து அவரை மிரட்டி அவரிடம் இருந்த ரூபாய் 17 ஆயிரத்தை பறித்துவிட்டு அவரை துரத்தியுள்ளனர். இதில் பயந்து போன அவர் அங்கிருந்து அருகில் உள்ள சோதனை சாவடியில் இருந்த இரண்டு போலீசாரிடம் சம்பவத்தை தெரிவித்தார்.
ஆனால் போலீசார் நடவடிக்கை .எடுக்காமல் போலீஸ் நிலையத்தில் சென்று புகார் கொடுங்கள் என்று கூறியுள்ளனர். இதனால் தவித்த அவர் போலீஸ் நிலையத்திற்கு செல்லாமல் செல்போன் மூலம் தன்னுடைய மனைவி மற்றும் உறவினர்களிடம் நடந்த விவரத்தை கூறினார்.
இந்த சம்பவத்தை கேள்விப்பட்டதும் ஆத்திரமடைந்த பொதுமக்கள் வழிப்பறி நடந்த இடம் நோக்கி திரண்டு வந்தனர். அப்போது அங்கு 2 திருநங்கைகள் பதுங்கி இருந்தனர். ஆவேசத்துடன் வந்த பொதுமக்களை பார்த்ததும் திருநங்கைகளில் ஒருவர் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பினார். ஆனால் மற்றொருவர் சிக்கிக்கொண்டார். அப்போது அவர் தன்னிடம் பணம் இல்லவே இல்லை என்று கூறவே,
மற்ற திருநங்கைகளுக்கு தொடர்பு கொண்டு இது பற்றிய விவரத்தை பொதுமக்கள் தெரிவித்தனர். இதையடுத்து பணம் திருப்பி ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.