பழங்குடியினர் கவுரவ தினம் - வகுப்பு சான்றிதழ் வழங்கிய ஆட்சியர்
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழங்குடியினர் கவுரவ தினத்தை முன்னிட்டு 10,000 ஆயிரமாவது பழங்குடியினர் வகுப்புச் சான்றிதழை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார்.திருப்பத்துார் அடுத்த ஜவ்வாது மாலை பகுதியில் உள்ள நெல்லிவாசல்நாடு மலையாண்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்த இளவரசி என்பவருக்கு எஸ்டி - மலையாளி வகுப்புச் சான்றிதழை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் மற்றும் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி ஆகியோர் வழங்கினர். திருப்பத்துார் மாவட்டத்தில், திருப்பத்துார் மற்றும் நாட்றம்பள்ளி தாலுகாவில் வசிக்கும் பழங்குடியினர் இன மக்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் முதல் தற்போது வரை 10 ஆயிரம் பழங்குடியினர் வகுப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. திருப்பத்துார் தாலுகாவில் உள்ள மலை கிராமங்களான ஏலகிரி மலை, புதுார்நாடு. புங்கம்பட்டுநாடு, நெல்லிவாசல்நாடு ஆகிய வருவாய் கிராமங்களில் மொத்தம் 55 குக்கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் மொத்தம் 6,767 குடியிருப்புகள் உள்ளது. மேலும் திருப்பத்துார் தாலுகா பாச்சல் கிராமத்தில் நரிக்குறவர் இன மக்களுக்கு இந்து நரிக்குறவர் (எஸ்டி) சான்றும், மாம்பாக்கம், வெங்களாபுரம், நாச்சார்குப்பம் மற்றும் நாட்றம்பள்ளி தாலுகா குருபவானிகுண்டா, செட்டேரிடேம் ஆகிய கிராமங்களில் வசிக்கும் பழங்குடியினர் இன மக்களுக்கு இந்து-இருளர் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் கூறினார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, சப் கலெக்டர் பானு,தாசில்தார் சிவப்பிரகாசம் ஆகியோர் உடன் இருந்தனர்.