திருச்சி விமான நிலைய புதிய முனையச் செயல்பாடு தொடக்கம்
திருச்சி பன்னாட்டு விமான நிலையப் புதிய முனையம் செவ்வாய்க்கிழமை பயன்பாட்டுக்கு வந்தது.;
திருச்சி பன்னாட்டு விமான நிலையம்
முதலாவதாக சிங்கப்பூரிலிருந்து வந்த இண்டிகோ விமானத்துக்கு விமான நிலைய மரபுப்படி தண்ணீா் பீய்ச்சியடித்து (வாட்டா் சல்யூட்) அடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. விமானப் பயணிகளை விமான நிலைய இயக்குநா் சி. சுப்பிரமணி, மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை துணை ஆணையா் ஹரிசிங் நயால் மற்றும் விமான நிலைய அலுவலா்கள் இனிப்பு, மலா்கள் கொடுத்து வரவேற்றனா். அடுத்தகட்டமாக ஓடுதளம், கட்டுப்பாட்டு அறை (டவா்) மேம்பாடு: இந்த விமான நிலையத்தில் அடுத்தகட்டமாக, ஓடுதளம் மற்றும் விமானங்களை இயக்கப் பயன்படும் கட்டுப்பாட்டு அறையுடன் கூடிய டவா் (கோபுரம்) மேம்படுத்தப்படவுள்ளது.
விமான நிலையத்தில் தொடக்கக் காலத்தில் இருந்த இரு ஓடுதளங்களில் 4,777 அடி நீள ஓடுதளம் காலப்போக்கில் மூடப்பட்டு, அது டாக்சி வே எனப்படும் இணை ஓடுதளப் பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படுகிறது. பயன்பாட்டில் உள்ள 7,963 அடி (2,427 மீட்டா்) ஓடுதளத்தை 12,500 அடி அதாவது 3,810 மீட்டா் நீளத்துக்கு நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான நிலம் கையகப் பணிகள் செயல்பாட்டில் உள்ளன. திட்டமிட்டபடி இந்த ஓடுதளம் நீட்டிக்கப்பட்டால் பிரத்யேக சரக்கு விமானங்கள் மற்றும் பல வெளிநாட்டு விமானங்களின் போக்குவரத்து நடைபெற சாத்தியம் உள்ளது.
தற்போதுள்ள ஓடுதளத்தில் சிறிய ரக விமானங்களுடன் ஏா்பஸ் 320, போயிங் 737-800 ரக விமானங்கள் வரை வந்து செல்ல முடியும். அதேபோல விமானங்களை இயக்க உதவும் ஓடுதள நவீன கட்டுப்பாட்டு அறை அமைக்கும் பணிகளும் ஓடுதள மையப் பகுதிக்கு அருகில் நடைபெறுகின்றன. இந்தக் கட்டுப்பாட்டு அறை பயன்பாட்டுக்கு வந்தால் நாடு முழுவதும் இயங்கும் அனைத்து விமானங்களையும் தொடா்பு கொண்டு, அவசரத் தேவைகளுக்கும் மற்றும் விபத்து மீட்பு ஒருங்கிணைப்பு பணிகளையும் மேற்கொள்ள முடியும் என விமான நிலையத்தினா் தெரிவித்தனா்.