எடப்பாடியில் 2 மணிநேர கனமழை - சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீர்
இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் வலுவடைந்து வரும் நிலையில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் எடப்பாடி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக காலை முதலே வெயிலின் தாக்கம் அதிக அளவில் காணப்பட்ட நிலையில் இரவு நேரத்தில் திடீரென கனமழை பெய்தது. எடப்பாடி நகரம், வெள்ளாண்டிவலசு, தாவாந்தெரு,மற்றும் கேட்டுக்கடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது. கன மழை காரணமாக சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீரிலும் பொதுமக்கள் நடந்து சென்றனர். வெள்ளாண்டிவலசு அருகே பழுதடைந்த கார் ஒன்றை தள்ளிக் கொண்டு வரும்போது சாலை முழுவதும் மழை நீர் தேங்கியுள்ளதால் சாக்கடையில் இறங்கிய காரை அருகில் இருந்தவர்கள் மீட்டு காரை அப்புறப்படுத்தினர். சிரமங்கள் இருப்பினும் 2 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கன மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.