பட்டுக்கோட்டையில் உதயநிதி ஸ்டாலின் தீவிர பிரச்சாரம்

பட்டுக்கோட்டையில் திமுக பிரச்சார கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் தஞ்சை நாடாளுமன்ற வேட்பாளர் முரசொலிக்கு வாக்கு சேகரித்தார்.

Update: 2024-04-05 12:23 GMT

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தபால் நிலையம் அருகே, வெள்ளிக்கிழமையன்று காலை, தஞ்சை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் ச.முரசொலியை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: உதயசூரியன் சின்னத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நமது வேட்பாளர் முரசொலிக்கு நீங்கள் போடும் ஓட்டு. அது தான் பிரதமர் மோடிக்கு வைக்கும் வேட்டு. கடந்த 2021 இல் சட்டமன்ற தேர்தலில் இத்தொகுதி வேட்பாளர் அண்ணாதுரை அவர்களுக்காக பிரச்சாரம் செய்தேன். அவருக்கு கிட்டத்தட்ட 25,300 வாக்கு வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தந்தீர்கள். அதற்கு நன்றி. இந்த சட்டமன்ற தொகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளில் செய்துள்ள சில பணிகளை மட்டும் குறிப்பிடுகிறேன்.  கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காசங்குளம் வடகரையில் கொண்டு வரப்பட்ட புதிய தினசரி சந்தை கட்டிடம் மக்கள் பயன்பாட்டிற்கு இப்பொழுது திறந்து விடப்பட்டுள்ளது. பட்டுக்கோட்டை தென்னை வணிக வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட 9 கோடியே 88 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆன பல்வேறு பணிகள் நிறைவடைந்துள்ளது.

மதுக்கூர் கண்ணனாறு மேல்மட்ட பாலம் பணிகள் 13 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. மக்களுடைய கோரிக்கையை ஏற்று அதிராம்பட்டினம் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தியதோடு ரூ.31 கோடி மதிப்பீட்டில் புதிய அலுவலகம் கட்டப்பட்டு வருகின்றது. பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கான வாக்குறுதிகள் செல்லப்பட்டு மட்டும் இங்கு குறிப்பிட்டுகிறேன்.   தேசிய வேளாண் கூட்டுறவு நிறுவனத்தின் மூலம் அடிப்படை ஆதார விலை நிர்ணயம் செய்யப்பட்டு கொப்பரை தேங்காய்களை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பட்டுக்கோட்டை நரியம்பாளையத்தில் நடைபெற்று வரும் புதிய பேருந்து நிலையத்திற்கு கட்டுமான பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படும். பட்டுக்கோட்டை நயினாங்குளம் உரக்கிடங்கில் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆன 10 எம்எல்டி கொள்ளளவு கொண்ட கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் புதிதாக அமைக்கப்படும். பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் தாய் சேய் நல மருத்துவமனை கட்டிடம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். பட்டுக்கோட்டை ரயில் வழித்தடத்தில் கம்பன் எக்ஸ்பிரஸ் ரயில் மீண்டும் இயக்கப்படும். பட்டுக்கோட்டை மன்னார்குடி புதிய ரயில் பாதை அமைக்கப்படும். பட்டுக்கோட்டை பைபாஸ் இரண்டாம் கட்ட பணிகள் விரைந்து முடிக்கப்படும். 70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மல்லிப்பட்டினத்தில் தூண்டில் வளைவு அமைக்கப்படும்.   பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டு தமிழகத்தின் மாநில அனைத்து உரிமைகளையும் விட்டுக் கொடுத்து விட்டார். எங்களுக்கு நீட் தேர்வு வேண்டாம். பொதுத்தேர்வு 12ஆம் வகுப்பு தேர்வு போதும் என்று சொன்னவர் கலைஞர். இன்னும் சொல்லப்போனால் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இருந்த வரைக்கும் தமிழ்நாட்டுக்குள்ள நீட் தேர்வு வரவில்லை. அந்த அம்மையார் இறந்த பிறகு இந்த அடிமைகள் எல்லாம் சேர்ந்து, அதிமுக அடிமை அமைச்சர்கள் எல்லாம் சேர்ந்து பாஜகவுடைய அழுத்தத்தின் காரணமாக நீட் தேர்வு தமிழ்நாட்டிற்குள் கொண்டு வந்து 22 குழந்தைகள் இறந்திருக்கிறார்கள். இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் தமிழகத்திற்கு நீட் தேர்வை விலக்கு அளிப்பேன் என்று நம் முதல்வர் வாக்குறுதி அளித்துள்ளார். அதிமுக ஆதரவோடு ஒன்றிய பாஜக அரசு சி.ஏ. சட்டத்தை கொண்டு வந்துள்ளது. சிறுபான்மை மக்கள், இலங்கை தமிழர்களையும் பாதிக்கக்கூடிய சிஏ சட்டத்தை கொண்டு வந்துள்ளது. மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டத்திற்கு கையெழுத்திட்டார் முதல்வர். இதன்வாயிலாக மகளிர் மாதாமாதம் ரூ.900 வரை சேமிக்கின்றனர். இந்த மூன்று ஆண்டுகளில் மகளிர் கட்டணமில்லா 460 கோடி பயணங்கள் மேற்கொண்டு பயனடைந்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் 13 கோடியே 5000 பயணங்களை மேற்கொண்டு இருக்கிறார்கள். அதேபோல் புதுமைப்பெண் திட்டம். இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தில் 3 லட்சம் கல்லூரி மாணவிகள் மாதம் ரூ. ஆயிரம் பெறுகின்றனர். இதில், தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் 10 ஆயிரம் மாணவிகள் பயனடைகின்றனர். ஒட்டுமொத்த இந்தியாவில் மேற்படிப்பு முடித்துவிட்டு வேலைக்கு செல்லும் பெண்களின் சதவீதம் 27 சதவீதம் மட்டுமே. தமிழகத்தில் படித்து முடித்து விட்டு வேலைக்கு செல்லும் பெண்களின் சதவீதம் 54 ஆகும். இது செய்து காட்டியவர் கலைஞர். இப்போது செய்து கொண்டு இருப்பது நம் கழக தலைவர். இந்தியாவிலேயே முதல் முதலாக தமிழகத்தில்தான் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இதைப் பார்த்து கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களிலும் இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தைப் பார்த்து கனடா நாட்டிலும் அந்நாட்டு பிரதமர் இதை நடைமுறைப்படுத்தி உள்ளார். இந்தியா மட்டுமல்லாமல், உலக நாடுகளுக்கும் திராவிட மாடல் அரசு முன்மாதிரியாக உள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் தமிழகத்தில் 1.16 கோடி பெண்கள் பயனடைகின்றனர். தஞ்சை மாவட்டத்தில் மட்டும் இதுவரை இத்திட்டத்தில் மட்டும் 4.22 லட்சம் மகளிர் பயன்பெற்று வருகின்றனர். இனி ஒன்றிய பிரதமரை மிஸ்டர் 29 பைசா என்றுதான் அழைக்க வேண்டும். இதுவே செல்லாக் காசுதான். ஜூன் 4ம் தேதிக்கு பின்னர் அவரும் அப்படித்தான். நாம ஜிஎஸ்டி வரி கட்டுறோம். ஒன்றிய அரசுக்கு ஒரு ரூபா கட்டுகிறோம். நாம ஒரு ரூபாய் கட்டினால் நமக்கு திருப்பி எவ்வளவு தெரியுமா. 29 பைசாதான் தருகிறார். பீகாரில் ரூ.1க்கு ரூ.7 கொடுக்கிறார். உத்தரபிரதேசத்தில் ரூ.3 திருப்பி கொடுக்கிறார். நம் மாநில உரிமைகளை கடந்த 10 ஆண்டுகளில் ஒன்றிய அரசிடம் அதிமுக அடிமைகள் அடகு வைத்து விட்டனர். அதை மீட்டெடுக்க வேண்டும். நம் உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரே வழி ஏப்ரல் 19ம் தேதி வாக்குச்சாவடிக்கு சென்று நமது வேட்பாளர் முரசொலிக்கு வாக்களித்து பெரிய வெற்றியை தேடி தர வேண்டும். இந்த முறை அடித்து சொல்கிறேன் 40க்கு 40 நாம் ஜெயிக்க போவது உறுதி. இந்த 40 தொகுதிகளில் தஞ்சாவூர் தொகுதி வேட்பாளர் முரசொலி தான் அதிக வாக்கு வித்தியாசத்தில் ஜெயித்தார் என்பதை நீங்கள் செய்து காட்ட வேண்டும்" இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News