அனுமதியின்றி நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டி - இருவர் பலி !
திருப்பத்தூர் அருகே அனுமதியின்றி நடைபெற்ற மஞ்சுவிரட்டுப்போட்டியில் மாடுகள் முட்டியதில் இருவர் பலி - போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே எஸ்.எஸ்.கோட்டையில் படைத்தலைவி அம்மன் கோயில் மற்றும் கருக்குமடை அய்யனார் கோயில் புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு கோயில் வாசலில் சம்பிரதாய வழக்கப்படி கிராமத்து மஞ்சுவிரட்டு நடைபெற்றது.
அரசு அனுமதி இன்றி நடைபெற்ற இந்த மஞ்சுவிரட்டில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதில் ஆங்காங்கே சீறிப்பாய்ந்து சென்ற காளைகள் முட்டியதில் மதுரை மாவட்டம், மேலூர் சேக்கிபட்டியைச் சேர்ந்த மணி என்பவரின் மகன் இரண்டாம் ஆண்டு தொழிற்கல்வி படிக்கும் மாணவன் சரண் (18 ) மாடு முட்டியதில், இவரது வலது மார்பில் குத்து காயம் ஏற்பட்டு உயிரிழந்தார்.
இதேபோன்று சிங்கம்புணரி தேத்திபட்டி கிராமத்தைச் சேர்ந்த கிச்சன் என்ற 60வயது முதியவரை மாடு இடித்ததில் நெஞ்சில் காயம் ஏற்பட்டு உயிர் இழந்தார். இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.